மும்பை: இந்தியாவின் மத்திய அரசாங்கம், தகவல்களை சரிபார்ப்பதற்காக தகவல் சரிபார்ப்புப் பிரிவுகளை (FCU) உருவாக்க வகைசெய்யும் சட்டத்தை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தகவல், தொடர்பு விதிமுறைகள், 2021க்கு மாற்றங்கள் செய்யப்பட்டது அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது என்று உயர் நீதிமன்றம் வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 26) எடுத்துரைத்தது. மத்திய அரசாங்கப் பணிகளின் தொடர்பில் சமூக ஊடகங்கள், மின்னிலக்கத் தளங்களில் இடம்பெறும் தகவல்களில் பொய்யான, தவறான கருத்துகளை ஏற்படுத்தக்கூடியவற்றைக் கண்டறிவதற்குத் தகவல் சரிபார்ப்புப் பிரிவுகளை உருவாக்க வகைசெய்யும் விதிமுறைகளையும் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
மேடை நகைச்சுவைக் கலைஞர் குணால் கம்ரா, இந்திய செய்தி ஆசிரியர்க் குழு (Editors Guild of India), இந்திய சஞ்சிகைச் சங்கம் (Association of Indian Magazines) உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்த மனுக்களை ஏ. எஸ். சந்துர்கர், அஜய் கட்காரி, நீலா கோக்காலே ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழு ஏற்றுக்கொண்டது. இந்த விவகாரத்தில் பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்துக்கேற்ப விதிமுறை 3(1)(v), அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது என்று நீதிபதிகள் குழு கூறியது.
அந்த விதிமுறை தெளிவாக இல்லை என்றும் அது சமமான அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை என்றும் நீதிபதி சந்துர்கர் கருத்துரைத்தார். அதனால் கம்ரா உள்ளிட்டோர் தெரிவித்த எதிர்ப்பை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் செய்யப்பட்ட சட்டத் திருத்தம் அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது என்று நீதிபதிகள் குழுவில் மூவரில் இருவர் உத்தரவிட்டனர். அந்த விதிமுறையைக் கொண்டு சமூக ஊடகங்களில் இடம்பெறும் பதிவுகள் பொய்யானவை, தவறான கருத்துகளை ஏற்படுத்தக்கூடியவை என்று மத்திய அரசாங்கத்தால் வகைப்படுத்த முடியும்.
மத்திய அரசாங்கம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யலாம்.