தீபாவளிக்குத் திருட்டு மின்சாரத்தில் ஒளிர்ந்த வீடு; முன்னாள் முதல்வருக்கு ரூ.68,000 அபராதம்

தீபாவளிக்குத் திருட்டு மின்சாரத்தில் ஒளிர்ந்த வீடு; முன்னாள் முதல்வருக்கு ரூ.68,000 அபராதம்

1 mins read
5055b375-c754-414e-91b8-7cb9a703fbf4
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி. - படம்: இந்திய ஊடகம்

பெங்களூரு: தீபாவளித் திருநாளின்போது திருட்டு மின்சாரம் கொண்டு தமது இல்லத்தை ஒளிரச் செய்ததாக வெடித்த சர்ச்சைக்கு இந்தியாவின் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மின்தொழில்நுட்பரின் (எலக்ட்ரிசியன்) தவற்றால் அது நிகழ்ந்துவிட்டது என்று விளக்கமளித்த குமாரசாமி, இருந்தாலும் அதற்காக ரூ.68,526 (S$1,106) அபராதம் செலுத்திவிட்டதாகவும் தெரிவித்தார்.

கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருவதால் அரசியல் ரீதியில் தமக்குச் சூனியம் வைப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“முதல்வர், துணை முதல்வர் தலைமையில், ‘நானொரு மின்சாரத் திருடன்’ என அரசாங்கமே அவதூறு பரப்பி வருகிறது,” என்றார் குமாரசாமி.

ஆனால், மின்சாரத் திருட்டில் ஈடுபட்டதால்தான் குமாரசாமி அபராதம் செலுத்தியுள்ளார் என்று முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

“தவறேதும் செய்யவில்லை எனில் அவர் ஏன் அபராதம் செலுத்தினார்?” என்று கேட்டுள்ளார் முதல்வர்.

தீபாவளித் திருநாளையொட்டி பெங்களூரு ஜே.பி. நகரிலுள்ள தமது வீட்டை மின்விளக்குகளால் ஒளிரச் செய்வதற்காக குமாரசாமி மின்சாரம் திருடினார் என்று இம்மாதம் 14ஆம் தேதி கர்நாடக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியது. அதற்குச் சான்றாக அருகிலிருந்த மின்பகிர்மானக் கம்பத்திலிருந்து ஒரு கம்பிவடம் சென்றதற்கான காணொளியையும் அது வெளியிட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்