பெங்களூரு: கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லைப் பகுதியில் இருக்கும் தொடக்கப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் அப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு வங்கியில் வைப்புத் தொகையாக ரூ.1,000 செலுத்தி வருகிறார்.
2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அப்பள்ளியில் கடந்தாண்டு வெறும் 18 மாணவர்கள் மட்டுமே இருந்தனர்.
2023ஆம் ஆண்டு அப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற சித்தமல்ல கோத்தா, பள்ளிக்கு மாணவர்களை ஈர்க்க பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். மாணவர்களுக்காக, வினாடி - வினா போட்டிகள் நடத்தி, தன் சொந்த செலவில் பரிசு வழங்கி வருகிறார்.
மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பிய அவர், அப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவர்கள் அனைவருக்கும் வங்கியில் வைப்புத் தொகையாக 1,000 ரூபாய் செலுத்த முடிவெடுத்தார். தன் சொந்த செலவில் இந்த முயற்சியை அவர் மேற்கொண்டார்.
அதன் பயனாகக் கடந்த ஆண்டு இரண்டாக இருந்த ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு ஒன்பதாக உயர்ந்துள்ளது.
அந்த வகுப்பு மட்டுமன்றி, மற்ற வகுப்புகளிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

