சுகாதாரச் சீர்கேடு: இந்தியாவில் ‘வாய் வாய்’ நூடல்ஸ் பொருள்களுக்குத் தடை

சுகாதாரச் சீர்கேடு: இந்தியாவில் ‘வாய் வாய்’ நூடல்ஸ் பொருள்களுக்குத் தடை

2 mins read
73bbf51e-596b-4e28-bd51-1f37f73f5380
உணவுப் பொருள்கள் தயாரிப்பில் சுகாதார விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டதால், ‘வாய் வாய்’ நூடுல்ஸ் பொருள்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்துள்ளது.  - படம்: சோமோய் போஸ்ட்
Google News Preferred Icon

புதுடெல்லி: தெற்காசிய வட்டாரத்தில் மிகவும் பிரபலமடைந்த ‘வாய் வாய்’ நூடல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சில உணவுப் பொருள்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம்  தடை விதித்துள்ளது. 

சுகாதாரமற்ற முறையிலும் போதிய தயாரிப்பு உரிமங்கள் இன்றியும் உணவுப் பொருள்களைத் தயாரித்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேப்பாள நாட்டின் ஒரே ‘பில்லியனரான’ வினோத் சௌத்ரிக்குச் சொந்தமான ‘சிஜி ஃபுட்ஸ் இந்தியா’ நிறுவனம் இந்த ‘வாய் வாய்’ நூடல்ஸ் வணிக முத்திரையில் உற்பத்தி செய்து வருகிறது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்நிறுவனத்தின் உற்பத்தித் தொழிற்சாலையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அண்மையில் மேற்கொண்ட திடீர் ஆய்வின்போது பல்வேறு தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

தொழிற்சாலையின் தரைப்பகுதியில் சிந்திக்கிடந்த உடைந்த நூடல்ஸ் கழிவுகளைச் சேகரித்து, எந்தவித வெப்பச் சுத்திகரிப்பும் செய்யாமல் ‘புஜியா’  எனும் கார வகை நொறுக்குத் தீனிகளைத் தயாரிக்க மீண்டும் பயன்படுத்தியது அதிகாரிகளின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. 

மேலும், தகுந்த தயாரிப்பு உரிமங்கள் இன்றிச் செயல்பட்டதுடன், உணவுப் பொட்டலங்களின் ‘பேக்கிங்’ தேதிகளை முன்கூட்டியே மாற்றி அச்சிட்டதும் உறுதியானது.

இதனைத் தொடர்ந்து, அந்தத் தொழிற்சாலையிலிருந்து சுமார் 32,000 கிலோகிராம் மதிப்பிலான உணவுப் பொருள்களையும், 1,925 காலாவதியான உணவுப் பெட்டிகளையும் அதிகாரிகள் உடனடியாகக் பறிமுதல் செய்தனர்.

மேலும், குறிப்பிட்ட இரண்டு நொறுக்குத் தீனி வகைகளின் உற்பத்தியை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டு, நூடல்ஸ் மாதிரிகள் விரிவான ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள ‘சிஜி ஃபுட்ஸ்’ நிறுவனம், தாங்கள் உணவுப் பாதுகாப்பு விதிகளுக்கு எப்போதும் மதிப்பளிப்பதாகவும், அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்