இரண்டு மணி நேரம் செயலிழந்த இதயம்; போராடி உயிரை மீட்ட மருத்துவர்கள்

இரண்டு மணி நேரம் செயலிழந்த இதயம்; போராடி உயிரை மீட்ட மருத்துவர்கள்

2 mins read
773caeef-c1af-403f-a914-9e27cbe67938
இதயம் நின்றுபோன ஒருவரை இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு உயிர்பிழைக்க வைத்த ஒடிசா எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களுக்குப் பாராட்டுகள் குவிகின்றன. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

புவனேஷ்வர்: இதயத் துடிப்பு நின்றுபோன ஒருவரை இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பிழைக்க வைத்த எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை மருத்துவர்களுக்குப் பாராட்டு குவிகிறது.

ஒடிசா மாநிலத்தின் நயகரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுபாகாந்த் (24 வயது). ராணுவ வீரரான இவர், செப்டம்பர் 30ஆம் தேதி இதயப் பிரச்சினை காரணமாக ரான்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் அங்குள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு 40 நிமிடங்கள் தொடர்ச்சியாக சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் அவரது இதயத்துடிப்பு செயல்படவில்லை.

இத்தகைய சூழலில், நோயாளி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவிப்பார்கள். ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்க் குழு தொடர்ந்து நோயாளியின் நுரையீரல் மற்றும் இதயத்தை வேலை செய்ய வைக்கக்கூடிய மேம்பட்ட முறையிலான சிகிச்சையளிக்க முடிவு செய்ததாக மருத்துவர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

மருத்துவமனையில் அனைத்துத் துறை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் உயிர்காக்கும் கருவிகளுடன் தீவிர சிகிச்சையைத் தொடங்கினர். இரண்டு மணிநேரப் போராட்டத்துக்குப் பிறகு நோயாளியின் இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கியது.

நோயாளியின் இதயத் துடிப்பு 30 மணி நேரத்தில் மேம்படத் தொடங்கியது. அடுத்த 96 மணி நேரத்தில் எக்மோ (ECMO) கருவியில் இருந்து நோயாளி வெற்றிகரமாக எடுக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, அவரது நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் போன்ற பிற உறுப்புகளும் பாதிக்கப்பட்டிருந்ததால் ஒரு மாத காலமாக அவரைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்துக் கண்காணித்ததாக மருத்துவர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

மேலும், நோயாளியை உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் இருந்து வெற்றிகரமாக எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் மீட்டதாகத் தெரிவித்தார்.

“நோயாளியின் இதயத் துடிப்பு நின்று 120 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது நாட்டில் அரிதான நிகழ்வுகளில் ஒன்றாகும். இசிபிஆர் (ECPR) போன்ற மேம்பட்ட மருத்துவக் கருவிகள், இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளில் உயிர்களைக் காப்பாற்றுவதில் முக்கியப் பங்காற்றியுள்ளன.

“நோயாளி சுபாகாந்த்தின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். விரைவில் வீடு திரும்புவார்,” என மருத்துவர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்