இந்தியாவின் நீண்டகாலம் வாழும் இதய மாற்று அறுவை சிகிச்சை பெற்ற பெண்

2 mins read
3309490b-1952-4e6e-8e81-86439ed79477
பிரீத்தி உன்ஹேல். - படம்: பாஸ்கர் இங்கிலீஷ்

போபால்: கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஒரு பெண்மணி இன்றளவும் நலமாக உள்ளார்.

இந்தியாவில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில், மிக நீண்ட காலம் நலமுடன் வாழ்பவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரீத்தி உன்ஹேல்.

கடந்த 2000ஆம் ஆண்டு மும்பையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது பிரீத்தி உன்ஹேலுக்கு இருதயத்தில் பிரச்சினை இருப்பது தெரிய வந்தது.

உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் அவரது இதய தசை பலவீனம் அடைந்து பெரிதாகிவிடும் என்றும் நாளடைவில் அதன் திறன் குறைந்து இதய செயலிழப்பு ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே அவர் உயிர் பிழைத்து இருப்பதற்கான ஒரே வாய்ப்பு என்றும் மருத்துவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர். அவருக்கு மாற்று இதயம் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மூளைச்சாவு அடைந்த மனோஜ் என்ற இளையரின் இதயம், கடந்த 2001 ஜனவரி மாதம் அறுவை சிகிச்சை மூலம் பிரீத்திக்குப் பொருத்தப்பட்டது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள இதய அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் வேணுகோபால், மருத்துவர் கேகே தல்வார் ஆகிய இருவரும் பிரீத்திக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

சிகிச்சைக்குப் பின், குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் உயிர் வாழ்வது உறுதி என்று கூறப்பட்ட நிலையில், 25 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார் பிரீத்தி.

“அக்காலகட்டத்தில் இத்தகைய அறுவை சிகிச்சைக்கு எந்தவித வழிகாட்டுதலும் இல்லை, வெற்றி விகிதமும் குறைவாகவே இருந்தது. ஆனால் வேறு வழியில்லை. இந்திய வனச்சேவை அதிகாரியான என் கணவரும் குடும்பத்தாரும் அருகில் இருந்ததால் சிகிச்சைக்குத் தயாரானேன்,” என்று கூறுகிறார் பிரீத்தி.

கடந்த 25 ஆண்டுகளில் இவர், இந்தியா முழுவதும் உள்ள இதய மாற்று நோயாளிகளுக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கி வருகிறார்.

“மருத்துவர்கள் இதய மாற்று அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைத்தால் ஒப்புக்கொள்ளுங்கள். நன்கொடையாளர்கள் கிடைப்பது அரிதான ஒன்று. உங்களுக்கென ஒரு இதயம் கிடைத்தால் உடனடியாக அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

“இது இரண்டாவது வாய்ப்பு என்பதை உணர்ந்து, முழுமையாக, அதேசமயம் ஒழுக்கமாக வாழுங்கள்,” என்கிறார் பிரீத்தி.

குறிப்புச் சொற்கள்