வெப்ப அலை: பீகாரில் பாலர் பள்ளி நேரத்தை மாற்றி அமைக்க உத்தரவு

வெப்ப அலை: பீகாரில் பாலர் பள்ளி நேரத்தை மாற்றி அமைக்க உத்தரவு

1 mins read
2d949abc-c505-4935-ae5f-571a34536464
வெப்ப அலையின் தாக்கம் உயிருக்கே ஆபத்தாகிவிடும் எனக் கவலை தெரிவித்துள்ளார் நீதிபதி தியாகராஜன். - சித்திரிப்புப்படம்: என்டிடிவி
Google News Preferred Icon

பாட்னா: இந்தியாவின் வடமாநிலங்களில் வீசத் தொடங்கியுள்ள வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, பீகார் மாநிலத்தில் இயங்கிவரும் அரசு, தனியார் பள்ளிகளுடன் அங்குள்ள அங்கன்வாடி மையங்களும் தங்களது வகுப்புகளுக்கான கல்வி நேரங்களை மாற்றி அமைக்க வேண்டும் என பாட்னா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகளின் உடல்நலமும் பாதுகாப்பும்தான் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி தியாகராஜன், வெப்ப அலையின் தாக்கம் உயிருக்கே ஆபத்தாகிவிடும் எனக் கவலை தெரிவித்தார்.

பாலர் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் உட்பட ஐந்து வயதுக் குழந்தைகளுக்கான எந்தவொரு கல்வி சார்ந்த நடவடிக்கையையும் பிற்பகல் 12.30 மணிக்கு மேல் மேற்கொள்ளக் கூடாது என்றும் அவரது உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் 2026 ஏப்ரல் 25 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு இணங்க தங்களது கால அட்டவணைகளை உடனடியாக மாற்றி அமைக்குமாறு மாவட்டப் பள்ளி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, பாட்னாவில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு வெப்ப அலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தற்போது வடமேற்கு, மத்திய, கிழக்கு பீகார் பகுதிகளில் வெப்ப அலை வீசி வருகிறது. வரும் 24ஆம் தேதிக்குள் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

எனவே, வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் வேளையில், தேவையின்றி பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்