கொட்டித் தீர்க்கும் கனமழை; டெல்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

கொட்டித் தீர்க்கும் கனமழை; டெல்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

2 mins read
9545433b-a573-4053-8330-f7451a465c6c
தொடர்ந்து மழை பெய்து வருவதால்,‘மஞ்சள்’ எச்சரிக்கையில் இருந்த டெல்லி நகரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு ‘சிவப்பு எச்சரிக்கை’யாக உயர்த்தப்பட்டுள்ளது. - படம்: பிடிஐ
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லி, அதனைச் சுற்றியுள்ள நொய்டா, காசியாபாத், குருகிராம் உள்ளிட்ட பகுதிகளில்  கனமழை கொட்டித் தீர்த்து வருவதைத் தொடர்ந்து, இந்திய வானிலை மையம்  தீவிர ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுத்துள்ளது.

டெல்லியில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் மேகமூட்டத்துடன் கூடிய கனமழையும், இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றும் வீசியது. இதையடுத்து, அதுவரை ‘மஞ்சள்’ எச்சரிக்கையில் இருந்த டெல்லி நகரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை உடனடியாக ‘சிவப்பு எச்சரிக்கை’ ஆக வானிலை மையம் உயர்த்தியது. 

பலத்த காற்றுடன் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் மழை பெய்யக்கூடும் என்றும், தாழ்வான பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடர் மழை காரணமாக டெல்லியின் பல முக்கியச் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

மேலும், மோசமான வானிலை காரணமாக டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தின் விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

டெல்லிக்கு வர வேண்டிய பல விமானங்கள் ஜெய்ப்பூர், லக்னோ, அகமதாபாத் ஆகிய நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. 

ஏர் இந்தியா உள்ளிட்ட முக்கிய விமான நிறுவனங்கள் பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளன.

அண்டை மாநிலங்களான உத்தரப் பிரதேசத்தின் நொய்டா மற்றும் காசியாபாத் பகுதிகளுக்கு ‘ஆரஞ்ச் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே ஆகஸ்ட் மாதத்தில் வழக்கத்தை விட அதிக மழை பதிவான நிலையில், செப்டம்பர் மாத தொடக்கத்திலேயே மீண்டும் கனமழை பெய்து வருவது மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளது.

பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளின்றி வெளியே வர வேண்டாம் என்றும், உள்ளூர் நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்