இந்தியா முழுவதுக்கும் கனமழை எச்சரிக்கை: டெல்லி, மும்பை தத்தளிப்பு

இந்தியா முழுவதுக்கும் கனமழை எச்சரிக்கை: டெல்லி, மும்பை தத்தளிப்பு

2 mins read
ad120113-fb65-445a-ab57-c20d7d0d70f4
மும்பையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அடுத்த ஐந்து நாள்களுக்கு அதே நிலை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது. - படம்: மிட்-டே
Google News Preferred Icon

புதுடெல்லி: நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் அடுத்த சில நாள்களுக்கு பரவலான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

குறிப்பாக, நாட்டின் வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தென்பகுதி மாநிலங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த மையம் முன்னுரைத்துள்ளது.

இமயமலையை ஒட்டிய மாநிலங்கள், சிந்து-கங்கை சமவெளி, மத்திய இந்தியா, கிழக்குப் பகுதிகள், மேற்கு கடற்கரையோரப் பகுதிகள் மற்றும் தென்னிந்தியாவின் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

உத்தராகண்ட், இமாசலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, பீகார், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேற்குக் கடற்கரைப் பகுதிகளைப் பொறுத்தவரை, கொங்கன் மற்றும் கோவா, மத்திய மகாராஷ்டிரா, கேரளா மற்றும் கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னிந்தியாவில், கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை ஆங்காங்கே பெய்யக்கூடும்.

தலைநகர் டெல்லியில் மேகமூட்டமான வானிலையுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அங்கு விடுக்கப்பட்ட ‘மஞ்சள் எச்சரிக்கை’ நீடிக்கிறது. அதேபோல, மும்பையிலும் மழை விடாமல் தொடர்கிறது.

சூறாவளிக் காற்று மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலின் பல பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவின் கடலோரப் பகுதிகள், அரபிக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் உள்ள மக்களுக்கும் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அசாம் மாநிலத்தில் வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமாக உள்ளது. பேரிடர் தகவல் நிர்வாக அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து, இவ்வாண்டின் தென்மேற்குப் பருவமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 95ஆக அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்