வட இந்தியாவில் கடும் பனி; பல விமானச் சேவைகள் பாதிப்பு

2 mins read
92cb3d19-fac1-4724-8c0e-e0401f3e6c0e
எதிரில் இருப்பவர்கள் தெரியாத அளவுக்குப் பனிமூட்டம் இருந்ததால் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப் பட்டன. - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: வட இந்தியாவின் முக்கிய நகரங்களில் இரண்டாவது நாளாக அடர்ந்த பனி மூட்டம் நிலவியது. இதனால் டெல்லியில் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

360 விமானச் சேவைகள் தாமதமாகின. 60 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 15 விமானங்கள் வேறு இடங்களுக்குத் திசை திருப்பிவிடப்பட்டன.

“கடும் பனிமூட்டம் காரணமாக விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விமானச் சேவைகளின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணைகளுக்கு விமான நிறுவனங்களைப் பயணிகள் தொடர்பு கொள்ளவும்,” என்று விமானச் சேவைகள் குறித்து டெல்லி அனைத்துலக விமான அமைப்பு சமூக ஊடகம் வழி தகவல் வெளியிட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை பாதிக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

“எதிரில் இருப்பவர்கள் தெரியாத அளவுக்கு விமான நிலையத்தில் அடர் பனிமூட்டம் சூழ்ந்திருப்பதால் விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விமான இயக்கம் மீண்டும் தொடங்கும்போது விமானப் போக்குவரத்து நெரிசல் காரணமாக இன்னும் தாமதம் ஏற்படலாம்,” என்று இண்டிகோ தெரிவித்தது.

இதேபோன்று ஏர் இந்தியா நிறுவனமும் தகவல் வெளியிட்டுள்ளது. டெல்லி அனைத்துலக விமான நிலையத்தில் தினமும் கிட்டத்தட்ட 1,300 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

‘ஆரஞ்சு’ எச்சரிக்கை

இதற்கிடையே, டெல்லியில் சனிக்கிழமை மிகவும் அடர்ந்த பனிமூட்டம் காணப்படும் என்று கூறி இந்திய வானிலை ஆய்வு நிலையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது.

டெல்லியில் சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியசாக பதிவானது. வெள்ளிக்கிழமை இது 9.6 டிகிரி செல்சியசாக இருந்தது.

அதேபோல் பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மேற்குவங்கம், மத்தியப் பிரதேசம் மாநிலங்களிலும் அடர்ந்த பனிமூட்டம் நிலவுகிறது.

இதனால், சாலைகளில் அடந்த பனி மூட்டம் சூழ்ந்திருப்பதால் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது. காற்று மாசும் நிலைமையை மோசமாக்கியுள்ளது. இதனால் சில இடங்களில் விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்