தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கனமழை: உத்தரப் பிரதேசத்தில் 18 பேர் பலி; கேரளாவில் அபாய எச்சரிக்கை

2 mins read
96dcbd00-2a51-48b1-a742-c8d81f65147c
உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக பல்வேறு மாவட்டங்களிலும் இடைவிடாத மழை பெய்து வருகிறது. - படம்: இந்திய ஊடகம்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெய்த கனமழையில் சிக்கி 18 பேர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாள்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருவதால் பொதுமக்களிடையே பாதிப்பும் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.

சித்ரகூட் மாவட்டத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். மஹோபா, பந்தா மற்றும் மொராதாபாத்தில் தலா மூன்று பேரும் காஜிப்பூர், லலித்பூர், கோண்டாவில் தலா ஒருவரும் மேலும் எட்டு பேர் நீரில் மூழ்கியும் உயிரிழந்தனர்.

வெள்ளம் காரணமாகப் படையெடுத்து வெளிக்கிளம்பிய பாம்புகள் கடித்ததில் இருவர் மாண்டனர்.

அந்த 18 பேரின் உயிரிழப்பும் ஜூலை 17 இரவு 8 மணி முதல் ஜூலை 18 இரவு 8 மணி வரை 24 மணி நேரத்திற்குள் நிகழ்ந்ததாக மாநில அரசின் அறிக்கை தெரிவித்து உள்ளது.

மழையின் பிடியில் கேரளா, கர்நாடகா

தென்னிந்திய மாநிலங்களான கேரளா, கர்நாடகா ஆகியவற்றிலும் கனமழை பெய்து வருகிறது. அதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி வருகின்றன.

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது. அந்த ஐந்து மாவட்டங்களிலும் அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கண்ணூர், வயநாடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து கல்விக் கழகங்களுக்கும் மழை காரணமாக ஜூலை 19ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து வட கேரளாவில் பெய்யும் கனத்த மழை, அடுத்த சில நாள்களுக்குத் தொடரும் என்று வானிலை ஆய்வகம் எச்சரித்தது.

கண்ணூர், காசர்கோடு போன்ற பகுதிகளில் மழை மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த இரண்டு பகுதிகளிலும் நாளை வரை சிவப்பு எச்சரிக்கை நிலை தொடரும். 22ஆம் தேதி வரை கேரளாவில் கனத்த மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு ஆகியவற்றைச் சேர்ந்த மீனவர்கள் இம்மாதம் 22ஆம் தேதிவரை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்