ஜம்மு காஷ்மீரில் புதன்கிழமை (ஆகஸ்ட் 26) பெய்த கனமழையால் பெருக்கெடுத்தோடிய வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர்.
முக்கிய நதிகளான தாவியிலும் ராவியிலும் வெள்ளம் அபாய அளவைத் தாண்டிவிட்டது. கதுவா நகரில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
ரியாசி மாவட்டத்தில் திரிகூட மலை மீதுள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. பாறைகள் சரிவுகளில் உருண்டோடின. பக்தர்கள் கோயிலுக்குப் பயணம் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்புக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பாலங்கள் இடிந்து விழுந்தன. கைப்பேசிக் கோபுரங்களும் மின்கம்பங்களும் சேதமுற்றன. பெரும்பாலான பகுதிகளில் தொலைத்தொடர்புச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜம்மு-ஸ்ரீநகர், கிஷ்துவார்-தோடா தேசிய நெடுஞ்சாலைகள் போக்குவரத்துத்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஜம்முவுக்கு வந்துபோகும் ரயில்சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன.
பள்ளிக்கூடங்கள், கல்வி நிலையங்கள், அலுவலகங்கள் முதலியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முக்கியச் சேவைகள் மட்டுமே இயங்கும் என்று ஜம்மு, காஷ்மீர் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. அங்கு இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஓரிரு நாள்களுக்குப் பெருமழை பெய்யும் என்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்திருக்கிறது.

