மும்பை: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், மும்பை, புனே நகரங்களில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக கனமழை நீடிப்பதால் மும்பை மாநகரின் புறநகர் ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வேலைக்குச் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சயான், குர்லா, செம்பூர், அந்தேரி போன்ற பகுதிகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்தேரி சுரங்கப்பாதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அது மூடப்பட்டது. மழைநீர் தேங்கியதால் சயான் சாலையில் வாகனப் போக்குவரத்து அடியோடு முடங்கியது.
மும்பை விமான நிலைய ஓடுபாதையில் மழைநீர் தேங்கியதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நிலைமையைத் தெரிந்துகொண்டு விமான நிலையத்திற்கு வருமாறு இண்டிகோ விமான நிறுவனம் தன் பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. சில ஏர் இந்தியா விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
இதனிடையே, புனே மாவட்டத்தில் மழை தொடர்பான விபத்துகளில் நால்வர் உயிரிழந்துவிட்டனர். தள்ளுவண்டியை நகர்த்த முயன்றபோது மின்சாரம் தாக்கி மூவரும், நிலச்சரிவில் சிக்கி ஒருவரும் மாண்டனர்.
புனே நகரில் தாழ்வான பகுதிகள் நீரில் தத்தளிக்கின்றன. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு வசித்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். புனே மாவட்டம் முழுவதும் இருக்கும் சுற்றுலா மையங்களை அடுத்த 48 மணி நேரத்திற்கு மூட மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார். புனே முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மும்பை மக்கள் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வரவேண்டாம் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
புனேயில் மழை வெள்ளத்தை ஆய்வு செய்த மகாராஷ்டிரத் துணை முதல்வர் அஜித் பவார், மாவட்ட நிர்வாகத்தைத் தயார்நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

