சபரிமலை: ‘ஃபெங்கல்’ புயலின் தாக்கத்தால் கேரளாவில் புதன்கிழமை (டிசம்பர் 4) வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) சபரிமலை, பம்பை, எருமேலி ஆகிய இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும், 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம் என்றும் வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாள்களாக சபரிமலை, பம்பை, நிலக்கல், எருமேலி ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பம்பை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் ஆறுகளில் இறங்கவும், குளிக்கவும் தடை விதித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தொடர் கனமழையால் பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஐயப்ப பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். மழையால் இரவு நேரங்களில் பக்தர்கள் கடும் சிரமப்படுவதாக கூறப்படுகிறது.