புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் இதுவரை பத்து பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்கள் ஆறு பேர் பெண்கள்.
அம்மாநிலத்தின் கட்டாக், பாலசோர், கோராபுட், கோர்த்தா, கஞ்சம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு நாள்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. சில இடங்களில் பலத்த இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழையும் பதிவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கோராபுட் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் அங்குள்ள வயல்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது இடி, மின்னலுடன் பெய்த மழை திடீரென வேகமெடுத்ததால், அனைவரும் அருகேயுள்ள குடிசைக்குள் புகுந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் மூன்று பேர் அந்த இடத்திலேயே உடல் கருகி மாண்டனர்.
அதேபோல் கஜபதி, தேன்கனல், கஞ்சம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் ஏழு பேர் இடி, மின்னல் தாக்கி பலியாகிவிட்டனர்.
அவர்களில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களும் அடங்குவர்.

