பெங்களூரு: கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் சனிக்கிழமை (மார்ச் 22) காற்றுடன் கூடிய கனத்த மழை பெய்தது.
மோசமான வானிலை காரணமாகப் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய கிட்டத்தட்ட 10 விமானங்கள் சென்னைக்குத் திருப்பி விடப்பட்டன.
இந்த மழை கடும் வெப்பத்திலிருந்து பெங்களூரு மக்களைச் சற்றே தணிக்கச் செய்தது. இருப்பினும், நகரின் பல இடங்களில் காற்றுடன் கூடிய மழையால் மரங்களும் அதன் கிளைகளும் முறிந்து விழுந்தன.
மேலும், சில பகுதிகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
இந்நிலையில் புலகேசி நகரில் மரம் விழுந்ததில் 3 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். கனமழையால் பெங்களூரு நகரில் மட்டும் கிட்டத்தட்ட 30 மரங்கள் மற்றும் 48 மரக்கிளைகள் விழுந்துள்ளன.
இதையடுத்து அதை அப்புறப்படுத்தும் பணியிலும், போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியிலும் அரசுத் துறை ஊழியர்கள் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) கர்நாடக மாநிலத்தின் தட்சிண கன்னடா, கொப்பல், பெங்களூரு, கோலார் மாண்டியா, மைசூர் உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ததாகப் பெங்களூரு வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது.
மாநிலத்தின் பெல்லாரி, விஜயநகரா பகுதிகளின் சில இடங்களில் மழைப் பதிவானது.

