டெல்லியில் பெய்த கனமழையால் விமானச் சேவை கடும் பாதிப்பு

2 mins read
0460bd0e-c3a9-4cc7-9be3-9ab4c816b4f5
டெல்லி, கனமழையால் நனைந்துள்ளது. - படம்: இந்துஸ்தான் டைம்ஸ் இணையம்.

புதுடெல்லி: இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் உருவாகும் சூறாவளி சுழற்சிகளும் மழையை தீவிரப்படுத்தியுள்ளன.

இதன் மறைமுகத் தாக்கமாக டெல்லி உள்பட வட மாநிலங்களில் மழை பெய்ய காரணமாக அமைந்துள்ளது.

இதனால், டெல்லி, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து உள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.

இந்த நிலையில், டெல்லியில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் 25 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

மேலும், 100 விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதால் சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் மே 23 முதல் மே 25 வரை இடியுடன் கூடிய மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை (மே 25) ஆகிய இரு நாள்களில் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுவதால் அந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருப்பூர், திண்டுக்கல்லில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்