தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மும்பை, பால்கர், நாசிக் பகுதிகளில் விடிய விடிய கொட்டிய கனமழை: வெள்ளத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழப்பு

2 mins read
713051cd-e659-4b75-b5d6-f875cd5e715c
மும்பையின் சூனா பட்டி பகுதியின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. - படம்: ஊடகம்

மும்பை: மும்பையில் கனமழை எச்சரிக்கையை அடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் புதன்கிழமை பரவலாக கனமழை கொட்டியது. புதன்கிழமை மாலை முதல் இரவு 10 மணி வரை 5 மணி நேரத்தில் 20 செ.மீ. மழை கொட்டியதால் மும்பையில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் பாதித்தது. கொலாபா, சான்டாக்ரூஸ், செம்பூரை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து முடங்கும் அளவு மழை கொட்டியதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

கனமழையால் புறவழிச் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும், 14 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக மகராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. நள்ளிரவுக்கு பிறகு மும்பையில் மழை குறைந்த நிலையில் இந்திய வானிலை மையம் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மஹாராஷ்டிராவின் பால்கர் மற்றும் நாசிக் மாவட்டங்களுக்கும் வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. தானே, ராய்கட், பூனே உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையின் பல பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. கன மழை தொடர்பான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். அந்தேரி பகுதியில் கரைபுரண்டு ஓடிய கால்வாய் தண்ணீரில் விழுந்து 45 வயது மாது ஒருவர் மாண்டார்.

கடந்த புதன்கிழமை புறநகர் ரயில்சேவைகளும் பல இடங்களில் சாலைப் போக்குவரத்துகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன. பின்னர் புதன் கிழமை காலையில் சேவைகள் வழக்கம் போல் தொடங்கின. இருப்பினும் உள்ளூர் ரயில் சேவையில் மட்டும் சற்றுத் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மும்பை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

அதிகபட்சமாக கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் சராசரியாக 169.85 மில்லி மீட்டர் மழையும், மேற்கு புறநகர்ப் பகுதிகளில் 104.17 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மும்பை சான்டா க்ரூஸ் பகுதியில் 170 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மும்பையின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி சாலைப் போக்குவரத்து முடங்கிப்போயுள்ளது.

மும்பை மாநகராட்சி ஆணையர் பூஷண் கக்ரானி கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து மழை தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும்படி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் செல்லவேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

அக்டோபர் 1 ஆம் தேதி வரை மும்பையில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை நிலையம் மும்பையின் தானே, பால்கர், ராய்கட் ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்