ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாள்களாக கடும் குளிர் காற்று வீசி வந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது.
இதனால் தெற்கு மத்திய காஷ்மீர் பகுதியில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
தலைநகர் ஸ்ரீநகரில் 8 அங்குல அளவுக்கு பனிப்பொழிவு பதிவாகியுள்ளது என்றும் கந்தர்பால், சோனாமார்க், அனந்த்நாக் உள்ளிட்ட பகுதிகளில் 8 முதல் 17 அங்குலம் வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளது என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடும் பனிப்பொழிவு காரணமாக அனந்தநாக் மாவட்டத்தில் போக்குவரத்து நிலை குத்தியது. ஏறக்குறைய இரண்டாயிரம் வாகனங்கள் நெரிசலில் சிக்கிக் கொண்டன. ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் வரும் 80 விழுக்காடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
“அதிகாரிகள் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்,” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குலு பகுதியில் பனிப்பொழிவால் கடும் பாதிப்புகளை எதிர்கொண்ட 5,000 சுற்றுலாப் பயணிகளை அம்மாநில காவல்துறை மீட்டது.

