ஸ்ரீநகர்: காஷ்மீரில் கடந்த ஜனவரி 23ஆம் தேதி முதல் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அதனால் 270 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை, பனியால் மூடப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தன. இதனால், நெடுஞ்சாலை மூடப்பட்டது.
அதேபோல, விமான நிலையத்திலும் பனி நிரம்பியுள்ளது.
இந்நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகருக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
“ஸ்ரீநகர் விமான நிலையத்தில் நிலவும் மோசமான வானிலை மற்றும் தொடர் பனிப்பொழிவு காரணமாக, பெரும்பாலான விமானங்கள் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) ரத்து செய்யப்பட்டுள்ளன” என்று விமான நிலைய ஆணையம் தகவல் வெளியிட்டது.
வார இறுதி விடுமுறை, குடியரசு தினம் என காஷ்மீருக்குச் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். தற்போது விமானங்கள் ரத்துசெய்யப்பட்டதால், அவர்கள் அவதியடைந்துள்ளனர்.

