அதிபர் முர்மு இருந்த ஹெலிகாப்டர் இறங்கியதும் உள்வாங்கிய தளப்பகுதி

1 mins read
de32aa81-06fd-4a21-96a6-d1f65dabc385
சம்பவம் பதிவான காணொளியில் இடம்பெறும் காட்சி. - காணொளிப் படம்: ஏஎன்ஐ

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா பகுதியில் இந்திய அதிபர் திரெளபதி முர்மு இருந்த ஹெலிகாப்டரின் சக்கரம் கிக்கிக்கொண்டதால் ஹெலிபேட் தளப்பகுதியின் ஓர் அங்கம் கவிழ்ந்தது.

புதிதாக அமைக்கப்பட்ட அந்த ஹெலிபேட், கடைசி நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஹெலிபேட் பகுதியின் தரைக் கற்கள் (concrete) முழுமையாகப் போடப்படாததால் அதனால் ஹெலிகாப்டரின் எடையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் அவர்கள் விவரித்தனர்.

ஹெலிகாப்டர் தரையிறங்க அப்பகுதி கடைசி நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதால் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) இரவுதான் ஹெலிபேட் அமைக்கப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இச்சம்பவம் காணொளியில் பதிவானது. அதில் ஹெலிகாப்டர் ஒருபக்கமாக சாய்ந்திருந்ததும் காவல்துறை, தீயணைப்புப் படையினர் ஹெலிகாப்டரை மீட்க முயற்சி செய்ததும் தெரிந்தது.

பலர் எடுத்த முயற்சிக்குப் பிறகு ஹெலிகாப்டர் வெற்றிகரமாக மீட்கப்பட்டது. ஹெலிகாப்டர் தரையிறங்கிய சிறிது நேரத்தில் ஹெலிபேடின் ஒரு பகுதி உள்வாங்கியதாக சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

ஹெலிகாப்டர் தரையிறங்க முதலில் பம்பை ஆற்றுக்கு அருகே இருக்கும் நிலக்கல் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது. வானிலை காரணமாக அவ்விடம் மாற்றப்பட்டது.

குறிப்புச் சொற்கள்