தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கள்ளக் குடியேற்றத்திற்கு உதவி; 40 பயண முகவர்களின் உரிமம் ரத்து

2 mins read
அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டதன் எதிரொலி
012a8b6b-97f8-41f0-9e14-d14a8cbd4837
கடந்த மூவாண்டுகளில், பயண முகவர்கள்மீது 3,200க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பஞ்சாப் காவல்துறை பதிவுசெய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. - படம்: அன்ஸ்பிளாஷ்

சண்டிகர்: அமெரிக்காவில் கள்ளத்தனமாகக் குடியேறி, இந்தியர்கள் பலர் நாடுகடத்தப்பட்டு வரும் நிலையில், சட்டவிரோதப் பயண முகவர்கள்மீது கவனம் திரும்பியுள்ளது.

அவ்வகையில், பஞ்சாப் மாநில அரசு 40 பயண முகவர்களின் உரிமங்களை ரத்துசெய்துள்ளது. ‘ஐஇஎல்டிஎஸ்’ (IELTS) எனப்படும் ஆங்கில தகுதித் தேர்வுப் பயிற்சி நிலையங்கள் சிலவற்றின் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எதிர்காலத்திலும் இத்தகைய நடவடிக்கை தொடரும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமிர்தசரஸ் நகரில் சட்ட பயண முகவர்கள் இயங்கிவருவதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறை அவர்கள்மீது நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்தியர்களைச் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிய பயண முகவர்கள்மீது தொடர்ந்து வழக்கு பதிந்து வருவதாகவும் அவர்களைப் பிடிக்க அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்களில் பலரும் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

பிப்ரவரி 5, 15, 16ஆம் தேதி என மும்முறை, மொத்தம் 333 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர். அவர்களில் 37.8 விழுக்காட்டினர், அதாவது 126 பேர் பஞ்சாப் மாநிலத்தவர் எனக் கூறப்பட்டது.

நாடுகடத்தப்பட்ட இந்தியர்களை ஏற்றி வந்த விமானங்களைப் பஞ்சாப்பில் தரையிறக்க அம்மாநில முதல்வர் பகவந்த் மான் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2020 மே மாதத்திலிருந்து, நாடுகடத்தப்பட்ட இந்தியர்களைச் சுமந்தபடி 21 விமானங்கள் அமிர்தசரஸ் நகரில் தரையிறங்கியுள்ளன.

கடந்த மூவாண்டுகளில், பயண முகவர்கள்மீது 3,200க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பஞ்சாப் காவல்துறை பதிவுசெய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இதன் தொடர்பில் பஞ்சாபி பாடகர் ஃபதேஜித் சிங் உள்ளிட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்தியக் கள்ளக் குடியேறிகளில் பலரையும் ஈர்ப்பதாகச் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்