தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கியூஆர் குறியீட்டின் உதவியால் பெற்றோருடன் இணைந்த சிறுவன்

1 mins read
69916b45-6d67-4ded-8645-1c2de8e5dbcf
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் அணிந்திருந்த கழுத்தணியில் கோக்கப்பட்டிருந்த பதக்கத்தில் இடம்பெற்றிருந்த கியூஆர் குறியீடு, காவல்துறையினர் அச்சிறுவனை அவனுடைய பெற்றோருடன் சேர்த்துவைக்க உதவியது. - படங்கள்: எக்ஸ் / மும்பைக் காவல்துறை

மும்பை: கழுத்தணியில் இணைக்கப்பட்டிருந்த பதக்கத்தில் அச்சிடப்பட்டிருந்த கியூஆர் குறியீடு, மனநலம் பாதிக்கப்பட்ட 12 வயதுச் சிறுவனை அவனுடைய பெற்றோருடன் மீண்டும் சேர்த்து வைக்க காவல்துறைக்குக் கைகொடுத்தது.

இந்தியாவின் மும்பை நகரம், கொலாபா பகுதியில் கடந்த வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 11) அச்சிறுவன் சுற்றிக்கொண்டிருந்ததாகக் காவல்துறை அதிகாரி ஒருவர் சொன்னார்.

“அவன் தொலைந்துபோய், துயரத்தில் இருக்கக்கூடும் என்று நினைத்து, அவனைச் சிலர் அணுகியபோது, அவனுக்கு எதுவும் சொல்லத் தெரியவில்லை. அவர்களில் ஒருவர் அவனை ஒரு காவலரிடம் அழைத்துச் சென்றார். இதனையடுத்து, யாரேனும் காணாமல் போனதாகப் புகார் வந்துள்ளதா எனக் கேட்டு, எல்லாக் காவல் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. ஆனாலும், பயனில்லை.

“அதன்பின் காவலர் ஒருவர் அச்சிறுவனின் கழுத்தில் ஒரு பதக்கம் தொங்கியதைக் கண்டார். அதனுள் ஒரு கியூஆர் குறியீடு இருந்ததையும் கண்டார். அதனைச் செயலியின் துணையுடன் வருடியபோது, அது மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காகப் பணியாற்றும் ஒரு லாப நோக்கமற்ற அமைப்பின் தொலைபேசி எண்ணைக் காட்டியது,” என்று அந்தக் காவல்துறை அதிகாரி விளக்கினார்.

அதனையடுத்து, அன்று காலையிலிருந்தே அச்சிறுவனை அவனுடைய பெற்றோர் தேடி வந்ததும் தெரியவந்தது.

பின்னர் அச்சிறுவன், காவல் நிலையத்தில் வைத்து அவனுடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். மகன் திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியில் பெற்றோரும் நிம்மதி அடைந்தனர்.

குறிப்புச் சொற்கள்