இன்றைய பரபரப்பான உலகில் ஒரு செய்தியாளர் தமது பணிகளிலிருந்து சற்று விலகித் தம் பாரம்பரியத்தை ஆராய முயல்வது எளிதானதன்று.
‘இந்தியாவை அறிந்துகொள்ளுங்கள் திட்டம்’ (Know India Programme) என இந்திய வெளியுறவு அமைச்சு ஏற்பாடு செய்திருந்த திட்டத்தின் வாயிலாக எனது வேர்களுடன் மீண்டும் இணைவதற்கும் இந்தியாவின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தைப் புரிந்துகொள்வதற்கும் ஒரு வாய்ப்பு கிட்டியது.
இத்திட்டம் உலகம் முழுவதும் உள்ள இந்திய வம்சாவளியினருக்கான சந்திப்புத் தளமாக அமைந்தது. இதன் மூலம் 21லிருந்து 35 வயதுடையவர்கள் இந்தியாவின் பண்பாட்டுச் சிறப்புகள், வளர்ச்சிச் சாதனைகள், ஆட்சிமுறைகள் ஆகியவற்றை நேரடியாகக் கண்டுணர்ந்தனர்.
பல ஆண்டுகளாக நடப்பிலிருக்கும் இத்திட்டத்தின் 79வது சந்திப்பில் நான் கலந்துகொண்டேன். இதில் 11 நாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்கள் 27 பேருடன் கைகோத்து எனது தனிப்பட்ட அடையாளத்தையும் தொழில்முறை ஆர்வத்தையும் இணைக்கும் 21 நாள் பயணத்தை மேற்கொண்டேன்.
ஃபிஜி, இலங்கை, நியூசிலாந்து, கென்யா, மொரிஷியஸ், இஸ்ரேல், சுரினாம், இந்தோனீசியா, மலேசியா, டிரினிடாட் அண்ட் டொபாகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களைச் சந்தித்து அவர்களின் கலாசாரத்தையும் நாட்டையும் பற்றி அறிந்துகொண்டேன்.
தலைநகர் புதுடெல்லியில் தொடங்கிய இந்தப் பயணத்தில் இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்களைப் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
தேசியப் போர் நினைவகம்
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் உயிர்நீத்த படைவீரர்களின் நினைவாக தேசியப் போர் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. அது ‘இந்தியா கேட்’ அருகில் அமைந்துள்ளது. முதல் உலகப் போரில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த படைவீரர்கள் 74,187 பேர் செய்த தியாகங்களின் நினைவுச்சின்னமாக ‘இந்தியா கேட்’ இருக்கிறது.
அதிபர் மாளிகை (ராஷ்டிரபதி பவன்)
இந்திய அதிபரின் அதிகாரபூர்வ குடியிருப்பாக ‘ராஷ்டிரபதி பவன்’ விளங்குகிறது. 340 அறைகள் கொண்ட இந்த மாளிகையில் பெரிய தோட்டங்கள், வெளிப்புற இடங்கள், மெய்க்காவலர்கள், பணியாளர்கள் குடியிருப்பு, அலுவலகங்கள் எனப் பல அம்சங்கள் உள்ளன. ராஷ்டிரபதி பவனில் வாரந்தோறும் காவலர்களின் பணி நேரம் முடிந்து அடுத்து பணியைத் தொடங்குவோருடன் பணிமாற்றம் செய்யும் சடங்கு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் வளமான ராணுவப் பாரம்பரியம் உள்ளடங்கியுள்ளது. மேலும், ஆயுதப்படைகளின் ஒழுக்க முறையையும் துல்லியத்தையும் இந்நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது.
தொடர்புடைய செய்திகள்
பிரதான்மந்த்ரி சங்க்ரஹாலயா
சுதந்திரத்திற்குப் பிறகான ஒவ்வோர் இந்தியப் பிரதமருக்கும் அஞ்சலி செலுத்தும்வகையில் அமைக்கப்பட்டுள்ளது பொது அருங்காட்சியகமான ‘பிரதான்மந்த்ரி சங்க்ரஹாலயா’. இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பைக் காட்டும் இந்த அருங்காட்சியகத்தில் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தங்கிய இடம் அமைந்துள்ளது.
குதுப் மினார், ஹுமாயூன் கல்லறை
குதுப் மினார் ஒரு வெற்றிக் கோபுரமாகக் கருதப்படுகிறது. இது தோமர் ராஜபுத்திரர்களால் நிறுவப்பட்ட டெல்லியின் மிகப் பழைமையான கோட்டையாகும். இது தெற்கு டெல்லியின் மெஹ்ராலி பகுதியில் உள்ள யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தலமாகும். இது 1199ஆம் ஆண்டுக்கும் 1220ஆம் ஆண்டுக்கும் இடையில் கட்டப்பட்டது. 399 படிகளைக் கொண்டுள்ள இந்தக் கோபுரம் சுற்றுப்பயணிகள் விரும்பும் பாரம்பரிய இடங்களில் ஒன்றாகும்.
முகலாயப் பேரரசர் ஹுமாயூனின் கல்லறை அவரது முதல் மனைவி பேரரசி பேகா பேகத்தின் ஆணையின் பேரில் 1558ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
தேசிய அரும்பொருளகம்
புதுடெல்லியில் அமைந்துள்ளது இந்தியாவின் தேசிய அரும்பொருளகம். இது இந்தியாவின் மிகப்பெரிய அரும்பொருளகங்களில் ஒன்று. 1949ல் நிறுவப்பட்ட இந்த அரும்பொருளகம் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து நவீனக் கலைப் படைப்புகள் வரை பல்வேறு கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இது இந்திய அரசின் கலாசார அமைச்சின்கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த அரும்பொருளகம் ‘ஜன்பத்’தில் அமைந்துள்ளது. இதில் ஏறத்தாழ 200,000 கலைப்படைப்புகள் உள்ளன.
இப்பயணத்தில் வழிபாட்டுத் தலங்களைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
தாமரைக் கோயில்
புதுடெல்லியில் அமைந்துள்ள தாமரைக் கோயில் பகாய் வழிபாட்டுத் தலமாகும். தாமரைப் பூ போன்ற அதன் வடிவத்தின் காரணமாகப் புகழ்பெற்ற இக்கோயிலுக்குள் செல்ல அனைவருக்கும் அனுமதி உண்டு. 1,300 பேர் கூடும் அளவுக்கு இதில் இடவசதி உண்டு.
இஸ்கான் கோயில்
‘ஸ்ரீ ஸ்ரீ ராதா பார்த்தசாரதி மந்திர்’ இஸ்கான் டெல்லி கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த இந்துக் கோயிலில் கிருஷ்ணன், ராதையை வழிபடுகிறார்கள். இக்கோயில் 1998ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி திறக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் இந்திய வேதக் கலாசார மையம் அமைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு தொழில்நுட்பங்கள் வாயிலாக இந்து மதத்தைப் பற்றி தெரிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் சுற்றுப்பயணிகளுக்குக் கிடைக்கும்.
ஆயுர்வேத மருத்துவமனை
மேற்கத்திய மருத்துவ முறைகளுக்கு இடையே சிலர் ஆயுர்வேத மருத்துவ முறைகளைப் பின்பற்றுவதுண்டு. ஆயுர்வேதம் 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில்தான் தோற்றுவிக்கப்பட்டது. பிற நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் சிலரும் ஆயுர்வேத சிகிச்சையில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
புதுடெல்லியில் ஆயுர்வேத மருத்துவத்திற்கெனத் தனி மருத்துவமனையும் ஆய்வுக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளன. ‘ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆயுர்வேதா’ என்றழைக்கப்படும் இதில் ஆயுர்வேத மருத்துவப் படிப்பை மேற்கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கு ஏராளமான பாடத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவின் பத்திரிகைத் துறை
இந்தியாவில் செயல்படும் சில செய்தி நிறுவனங்களுக்குச் சென்று அங்கு பத்திரிகைத் துறை எவ்வாறு செயல்படுகிறது என்பதைச் செய்தியாளர்கள் அனைவரும் அறிந்துகொண்டோம்.
‘ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல்’ தலைமையகத்திற்குச் சென்றிருந்தபோது செய்திகள் ஒரே பக்கம் சாராமல் நடுநிலையான முறையில் எழுதப்படுவதைத் தெரிந்துகொண்டோம். பல வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்களுடன் கைகோத்துள்ள இந்த நிறுவனம் மொத்தம் 150 செய்தி நிறுவனங்களுடன் ஒத்துழைத்து வருகிறது.
பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா
இந்தியாவின் ஆகப் பெரிய செய்தி நிறுவனம் ‘பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா’ ஆகும். 500க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட இந்நிறுவனத்தில் செய்தியாளர்கள் 400 பேர் பணிபுரிகின்றனர். ஆங்கிலத்திலும் இந்தியிலும் செய்திகள் எழுதப்படுகின்றன. தாய்லாந்து, அமெரிக்கா, துபாய், மலேசியா, ரஷ்யா போன்ற நாடுகளிலும் இந்நிறுவனத்துக்கு அலுவலகங்கள் உள்ளன.
தூர்தர்ஷன்
தூர்தர்ஷன் இந்திய அரசுக்குச் சொந்தமான தொலைக்காட்சி நிறுவனம். கடந்த சில ஆண்டுகளில் அது 34 தொலைக்காட்சி ஒளிவழிகளைக் கொண்டுள்ளது.
இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம்
புதுடெல்லியில் அமைந்துள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் தெற்காசியாவின் சிறந்த பொறியியல் கல்விக் கழகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆய்வுக்கு அதிக முக்கியத்துவம் தரும் இக்கழகம் 12,000க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுக்கான தனிப்பட்ட பள்ளி ஒன்றை அமைத்துள்ள இக்கழகத்தில் மாணவர்களுக்குத் தொழில்முனைவோர்க்கான அனுபவங்களை அளிக்கும் நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மும்பை சென்றதும் மாறுபட்ட அனுபவத்தை அளித்தது.
சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கரஹாலயா
சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கரஹாலயா மும்பையில் இருக்கும் புகழ்பெற்ற அரும்பொருளகமாகும். இது வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து நவீன காலம் வரையிலான இந்தியாவின் வரலாற்றை ஆவணப்படுத்துகிறது.
இது 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் இந்தியாவின் பிரிட்டிஷ் ஆட்சியின்போது வேல்ஸ் இளவரசரின் வருகையை நினைவுகூரும் வகையில் அரசாங்கத்தின் உதவியுடன் நகரத்தின் முக்கிய குடிமக்களால் நிறுவப்பட்டது.
இது தெற்கு மும்பையின் மையப்பகுதியில் ‘கேட்வே ஆஃப் இந்தியா’விற்கு அருகில் அமைந்துள்ளது. மராட்டியப் பேரரசை நிறுவிய சிவாஜியின் நினைவாக இந்த அரும்பொருளகம் 1998ல் மறுபெயரிடப்பட்டது.
ஃபிலிமிஸ்தான் ஸ்டூடியோ
ஃபிலிமிஸ்தான், மும்பையின் கோரேகானில் உள்ள ஓர் இந்தியத் திரைப்படத் தயாரிப்புக் கூடமாகும். இந்தி மொழியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமன்றி, குச் குச் ஹோத்தா ஹை போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களின் படப்பிடிப்பும் இங்கு இடம்பெற்றது.
இந்தியாவின் வளர்ச்சியில் கற்றுக்கொண்ட பாடங்கள்
1986ல் இந்திய வெளியுறவு அமைச்சு தொடங்கிய ‘சுஷ்மா ஸ்வராஜ் வெளிநாட்டுச் சேவைக் கழகம்’ இந்தியாவின் வெளிநாட்டுச் சேவை அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கும் முக்கிய இடமாகத் திகழ்கிறது.
கழகத்தின் தலைவர் ஸ்ரீ ராஜ் குமார் ஸ்ரீவத்ஸவா இந்திய வரலாற்று உலகத்திற்கு எங்களை இட்டுச்சென்றார். அதன் மூலம், இந்தியாவின் பழைமையை மட்டும் பார்க்காமல், அதன் எதிர்காலத்தையும் எங்களால் அறிய முடிந்தது. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைகள் பற்றிய அமர்வும் இடம்பெற்றது. உலகில் இந்தியா உத்திபூர்வ இடத்தைப் பிடிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மிகத் தொன்மையான நாகரிகத்தைக் கொண்டுள்ள இந்தியா பன்முகத்தன்மையைக் காத்து பிற நாடுகளுடன் வைத்திருக்கும் தொடர்பு, நிலையாக இருப்பதை உணர்ந்தேன்.
தொழில், பயணத்துறை, தொழில்நுட்பம் ஆகிய மூன்று முக்கியக் கூறுகளின் மூலம் இந்தியா அதன் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்லவிருப்பதாகவும் தகவல் பகிரப்பட்டது.