தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொள்ளையர்களுடன் இரண்டரை மணி நேரமாகப் போராடிய வீர மூதாட்டி

2 mins read
828cbc7d-2df5-44ea-a0c6-90e14a84c547
மாதிரிப்படம்: - ஊடகம்

நாக்பூர்: வீடு புகுந்த கொள்ளையர்களைத் துணிச்சலாக எதிர்கொண்டு, வீரமங்கையாகத் திகழ்ந்திருக்கிறார் 72 வயது மூதாட்டி ஒருவர்.

ரமலா அகாஷே என்ற அப்பெண்மணி, இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) எரிவாயு உருளை விநியோகத்தை எதிர்பார்த்து, தம் வீட்டின் கதவைத் திறந்து வைத்தபடி அவர் காத்திருந்தபோது கொள்ளையர்கள் புகுந்தனர்.

அவர்களில் ஒருவன் வெளியே வந்து, அவ்வீட்டிற்கு எரிவாயு உருளையைக் கொண்டுவந்த ஆடவரைத் திருப்பி அனுப்பிவைத்ததாகக் கூறப்பட்டது.

கொள்ளையர்கள் ரமலாவைத் துணியால் கட்டிவைத்து, கத்தியைக் காட்டி மிரட்டியபோதும், அவர் நிலைப்பேழைச் சாவியை அவர்களிடம் தர இணங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் அவரின் முகத்தில் குத்தினர். அதனால் ரத்தம் வழிந்தபோதும், ரமலா அவர்களைத் துணிந்து எதிர்கொண்டார்.

அவர்களில் ஒருவரது சட்டையின் கழுத்துப்பட்டியைப் பிடித்த ரமலா, அவரைக் கீழே வீழ்த்தினார். எவ்வளவு மிரட்டியும் ரமலாவிடமிருந்து ஒன்றும் தேறாது என்பதை உணர்ந்த கொள்ளையர்கள், அவரின் தாலி, ஒரு மோதிரம், 900 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றுடன் அங்கிருந்து அகன்றனர்.

பின்னர், தமது பற்களால் கட்டை விடுவித்த ரமலா, பொறியாளராக இருக்கும் தன் மகனுக்குத் தகவல் தந்தார். விரைந்து வந்த அவருடைய மகன், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ரமலா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இனியொருமுறை கொள்ளையர்கள் வந்தாலும் அவர்களை எதிர்கொண்டு, அவர்களைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்க ரமலா விரும்புகிறார்.

இதனிடையே, கண்காணிப்புப் பதிவன்களில் (சிசிடிவி) பதிவான காணொளியை ஆராய்ந்தபோது, ரமலாவின் வீட்டிற்குள் நுழைந்தவர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்பதையும் அவர்கள் அடிக்கடி சிறை சென்று வருபவர்கள் என்பதையும் காவல்துறை கண்டறிந்தது.

குறிப்புச் சொற்கள்