30 சோப்பு டப்பாக்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2.10 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

30 சோப்பு டப்பாக்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2.10 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

1 mins read
அசாமில் அதிரடிச் சோதனை
f4b61c73-23d2-44b3-9189-bff4bd6c8005
அசாமில் வாகனச் சோதனையின்போது, 349 கிராம் எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் வைக்கப்பட்டிருந்த 30 சோப்பு டப்பாக்களைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். இதுதொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். - படங்கள்: இந்தியா டுடே

அசாம்: அசாமின் மெகர்பூர் பகுதியில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், 30 சோப்பு டப்பாக்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2.10 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை அசாம் ரைஃபிள்ஸ் படையினர் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலின் அடிப்படையில், அசாம் ரைஃபிள்ஸ் படையினரும் காவல்துறையினரும் இணைந்து மெகர்பூர் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே வந்த ஒரு வாகனம், பாதுகாப்புப் படையினரைக் கண்டதும் தப்பிச் செல்ல முயன்றது.

உடனடியாக வாகனத்தை விரட்டிச் சென்ற கூட்டுப் படையினர், அதனை மடக்கிப் பிடித்தனர்.

வாகனத்தைச் சோதனை செய்தபோது, அதிலிருந்த 30 சோப்பு டப்பாக்களுக்குள் ஏறக்குறைய 349 கிராம் எடையுள்ள ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அனைத்துலகச் சந்தையில் அதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 2.10 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களையும் கூடுதல் விசாரணைக்காக அசாம் ரைஃபிள்ஸ் படையினர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான தொடர் முயற்சியில் இப்பகுதியில் நடத்தப்பட்ட இந்நடவடிக்கை ஒரு மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்