புதுடெல்லி: பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரிலும் இந்தியா மேற்கொண்ட ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ தாக்குதல் நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் ஆகிய மூன்று இந்திய மாநிலங்கள் அதிக விழிப்புநிலையுடன் உள்ளன.
அங்கு பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன; பள்ளிகள் மூடப்பட்டுள்ளன; முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேரைப் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதற்குப் பதிலடியாக, ஜெய்ஷ்-இ-முகம்மது, லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களின் முகாம்களைக் குறிவைத்து புதன்கிழமை (மே 7) அதிகாலை இந்தியா தாக்குதல் நடத்தியது. ஆயினும், தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளில் பயங்கரவாத முகாம்கள் இல்லை எனப் பாகிஸ்தான் மறுத்து வருகிறது.
இந்தியா நடத்திய தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாகவும் 57 பேர் காயமுற்றதாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது. அதே வேளையில், பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காஷ்மீரின் பூஞ்சில் 13 பேர் கொல்லப்பட்டதாகவும் 59 பேர் காயமடைந்ததாகவும் இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியா மேற்கொண்ட தாக்குதலுக்குப் பழிதீர்ப்போம் என்று பாகிஸ்தான் சூளுரைத்துள்ளது.
இதனையடுத்து, எல்லையோர மாநிலங்கள் அதிக விழிப்புநிலையுடன் உள்ளன.
இந்தியாவின் பஞ்சாப் மாநில அமைச்சர் அமன் அரோரா, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லையோர மாவட்டங்களில் பொதுமக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
எஸ்பிஎஸ் நகர், ஜலந்தர் பகுதிகளில் தாம் பங்கேற்பதாக இருந்த போதைத் தடுப்பு நிகழ்ச்சிகளை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ரத்து செய்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அதிகாரபூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும் பீதியைக் கிளப்புவதைத் தவிர்க்குமாறும் திரு அரோரா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதன் அண்டை மாநிலமான ராஜஸ்தானில் கிஷான்கர், ஜோத்பூர் விமான நிலையங்கள் மே 10ஆம் தேதிவரை மூடப்பட்டுள்ளன. எல்லைப் பாதுகாப்புப் படை சுற்றுக்காவல் மேற்கொண்டு வருகிறது. வான்வெளித் தற்காப்புப் படைப்பிரிவும் தயார்நிலையில் உள்ளது.
அங்கு பார்மர், ஜெய்சல்மெர், ஜோத்பூர், பிகானெர், ஸ்ரீகங்காநகர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளும் பயிற்சி நிலையங்களும் கால வரம்பின்றி மூடப்பட்டுள்ளன. வியாழக்கிழமை நடக்கவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. விடுப்பில் இருக்கும் அரசு அதிகாரிகள் உடனே பணிக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எல்லையை ஒட்டி அமைந்துள்ளவற்றில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை அடையாளம் கண்டு, பாதுகாப்பை வலுப்படுத்தும்படி மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய கட்ச் போன்ற மாவட்டங்களில் பதற்றநிலை நிலவுவதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி தெரிவிக்கிறது. புஜ், ராஜ்கோட் விமான நிலையங்களில் மூன்று நாள்களுக்குப் பயணிகள் விமானச் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இப்போது அவ்விரு விமான நிலையங்களும் ராணுவ விமானங்களுக்காகச் சேவையாற்றி வருகின்றன.
ஜாம்நகர் போன்ற கடலோர, எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினரின் சுற்றுக்காவலும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அம்மாநிலத்திலுள்ள ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
25 ஆளில்லா வானூர்திகளைச் சுட்டு வீழ்த்தினோம்: பாகிஸ்தான்
இதனிடையே, இதுவரை இந்தியாவின் 25 ஆளில்லா வானூர்திகளைச் சுட்டுவீழ்த்திவிட்டதாகப் பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது. அவையனைத்தும் இஸ்ரேலியத் தயாரிப்பான ‘ஹரோப்’ வகை ஆளில்லா வானூர்திகள் என்றும் அது குறிப்பிட்டது.
“நேற்றிரவு (மே 7) பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளுக்கு இந்தியா ஆளில்லா வானூர்திகளை அனுப்பி அத்துமீறி நடந்துகொண்டது,” என்று ராவல்பிண்டியிலுள்ள ராணுவத் தலைமையகத்தில் பாகிஸ்தான் ராணுவப் பேச்சாளர் அகமது ஷரிஃப் சௌத்ரி தெரிவித்தார்.