புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் வரும் டிசம்பர் மாதம் ஐந்து, ஆறாம் தேதிகளில் இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரு புட்டின் இந்தியா செல்வார் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கூறியதாக முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.
23வது இந்தியா-ரஷ்யா இருதரப்பு உறவுக் கூட்டத்தில் பங்கேற்க திரு புட்டின் இந்தியா செல்லக்கூடும் என்று தகவல் தெரிந்தோர் கூறியுள்ளனர். இந்தச் சந்திப்பு ஆண்டுதோறும் நடக்கும் ஒன்று.
இதுகுறித்து புதுடெல்லி, மாஸ்கோ இரண்டும் உறுதிப்படுத்தவில்லை. எனினும், ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள, தகவல் தெரிந்தவர்கள் சந்திப்புக்கான இலக்குகளை இறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா-உக்ரேன் போர் தொடங்கியதிலிருந்து இதுவே திரு புட்டினின் முதல் இந்தியப் பயணமாக இருக்கும். இதற்கு முன் கடைசியாக அவர் 2022ஆம் ஆண்டு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உத்திபூர்வ பங்காளித்துவம் வலுவடைந்துவரும் வேளையில் திரு புட்டின் மேற்கொள்வதாகக் கூறப்படும் பயணம் அமைகிறது.
ரஷ்ய அரசாங்கத்தின் ஆதரவுடன் செயல்படும் ஆர்டி (RT) ஒளிவழியின் இந்தியக் கிளையையும் திரு புட்டின் தமது பயணத்தின்போது தொடங்கிவைப்பார் என்று நம்பப்படுகிறது.

