திருவனந்தபுரம்: நீதிமன்றத் தீர்ப்பு, உத்தரவுகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் (ஏஐ) பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றங்களுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு வழக்கில் தீர்ப்பு முடிவுகளை ஆராயவோ அல்லது தீர்ப்பு உத்தரவுகளைத் தயார் செய்யவோ ஏஐ கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம். அதில் பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளன. தகவல்கள் வெளியே கசியவும் வாய்ப்புள்ளன.
எனவே, நீதிமன்றத் தீர்ப்புகள், உத்தரவுகளைப் பிறப்பிக்க சாட்ஜிபிடி, டீப்சீக் போன்ற க்ளவுடு ஏஐ கருவிகளைப் பயன்படுத்தக்கூடாது என்றும் இந்த வழிகாட்டுதல்களை மீறினால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“அதேநேரத்தில் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் முறையான பயிற்சி வேண்டும். நீதித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். ஆனால், தீர்ப்புகளுக்குப் பயன்படுத்தக் கூடாது,” என்று கூறியுள்ளது.
செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு தொடர்பாக ஒரு நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிடுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

