மும்பை: உண்மைத்தன்மையை அறியாமல் புகாரை விசாரணைக்கேற்ற அமலாக்கத் துறைக்கு மும்பை உயர் நீதிமன்றம் அபராதம் விதித்தது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர் குல் அச்ரா. இவர் சொத்துச் சந்தை தொழிலதிபரான ராகேஷ் ஜெயின்மீது பண மோசடி, ஒப்பந்த மீறல் தொடர்பாக அமலாக்கத்துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது.
இந்த விசாரணைக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் ராகேஷ் ஜெயின் வழக்கு தொடர்ந்திருந்தார். அவ்வழக்கு நீதிபதி மிலிந்த் ஜாதவ் அமர்வில் புதன்கிழமையன்று (ஜனவரி 22) விசாரணைக்கு வந்தது.
ராகேஷ் ஜெயின்மீது தவறாகப் புகார் அளிக்கப்பட்டதாகக் கூறி, அமலாக்கத் துறையிடம் அவர்மீது பொய்ப் புகார் அளித்த குல் அச்ராவுக்கு நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.
மேலும், புகாரின் உண்மைத்தன்மையை அறியாமல் அதை விசாரணைக்கேற்ற அமலாக்கத் துறைக்கும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தீர்ப்பின்போது, “அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் மக்களை துன்புறுத்துவதன் மூலம் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க முடியாது. புலனாய்வு அமைப்புகள் சட்டத்தின் அளவுகோல்களுக்குள் நடந்துகொள்ள வேண்டும்,” என்று நீதிபதி கூறினார்.

