லக்னோ: உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ரூ.75,000 (S$1,105) அபராதம் விதித்துள்ளது.
தன் சொந்த விருப்பத்தின்பேரில் தன் மகளைப் பார்க்க டெல்லிக்குச் சென்றதாக பெண் ஒருவர் குற்றவியல் நடுவர் முன்னிலையில் வாக்குமூலம் அளித்தும் அவர் கடத்தப்பட்டதாகக் கூறி, விசாரணையைத் தொடர்ந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டது.
கொலை செய்வதற்காக அப்பெண்ணைக் கடத்தியதாகக் கூறி தங்கள்மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி, உபைத் கான் உள்ளிட்ட சிலர் உயர் நீதிமன்றத்தை நாடினர்.
அவ்வழக்குத் தொடர்பில் உபைத் கான் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி கைதுசெய்யப்பட்டு, அப்போதுமுதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அபராதத்தில் 50,000 ரூபாயை உபைத்தும் எஞ்சிய 25,000 ரூபாயை உயர் நீதிமன்றத்தின் சட்ட உதவிச் சேவைகளுக்கும் வழங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட பெண் கண்டுபிடிக்கப்பட்டு, செப்டம்பர் 19ஆம் தேதி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அப்போது, தம் கணவர் தம்மை அடித்துத் துன்புறுத்தி வந்ததால் தாமாகவே வீட்டைவிட்டு வெளியேறியதாக அவர் சொன்னார். அத்துடன், மதமாற்றம் தொடர்பில் அவர் எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை.
அப்பெண் தெளிவாக வாக்குமூலம் அளித்தும், அவ்விவகாரம் குறித்துக் காவல்துறை தொடர்ந்து விசாரித்து வந்ததையும் புகார்தாரரைச் சிறையில் அடைத்திருந்ததையும் நீதிமன்றம் அறிந்தது.
இதனையடுத்து, அப்பெண்ணின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் அரசுத் தரப்பு முன்வைத்த வாதத்தை அப்பெண்ணே ஏற்கவில்லை என்ற நிலையில், வழக்கைத் தொடர்ந்து விசாரிப்பதில் எந்த நியாயமும் இல்லை என்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள உபைத்மீது வேறு எந்த வழக்கும் இல்லையெனில் உடனடியாக அவரை விடுவிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

