கல்லீரல் அறுவை சிகிச்சை: காத்திருப்போர் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு

கல்லீரல் அறுவை சிகிச்சை: காத்திருப்போர் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு

2 mins read
cc4bab97-a952-404e-8150-1b636fce3639
தமிழக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை - படம்: த இந்து

மதுரை: தமிழகத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பவர்களின் பட்டியலை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ஆணை பிறப்பித்துள்ளது.

மதுரையின் கே.கே. நகரைச் சேர்ந்த வெரோனிக்கா மேரி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில்:

தமிழகத்தில் மூளைச்சாவு வழி இறந்தோரிடம் தானமாகப் பெறப்படும் கல்லீரல்போன்ற உடல் உறுப்புகளை அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்குத் பொருத்த தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும்படி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், தமிழகத்தின் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 3 ஆண்டுகளுக்குள் கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பின்னரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான அடிப்படை வசதிகள் இல்லை.

தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உட்பட 6 அரசு மருத்துவமனைகள், 48 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட கல்லீரல்கள் தானமாகப் பெறபட்டுள்ளன. இதில் 94 கல்லீரல்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 91 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்றுள்ள நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகூட நடைபெறவில்லை.

அதேவேளையில், மதுரையைச் சுற்றியுள்ள பல தனியார் மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.

எனவே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கல்லீரல்மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமர்வு முன்னிலையில் அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “மதுரை அரசு மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

மனுதாரர் வழக்கறிஞர் வாதிடும்போது, “மதுரையில் ஏராளமானோர் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். ஆனால், இதுவரை ஒரு அறுவை சிகிச்சைகூட நடைபெறவில்லை” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், “தமிழகத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்து காத்திருப்பவர்கள் விவரத்தை, உடல் உறுப்பு மாற்றுஆணைய உறுப்பினர் செயலர் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 11க்கு ஒத்திவைத்தனர்.

-----------------

குறிப்புச் சொற்கள்