தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
அதிக பிள்ளைகள் பெற்றுக்கொள்ளச் சொல்லி ஆந்திரா, தமிழ்நாடு கோருவதன் காரணம்

முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு, பிறப்பு விகிதம் குறைவு

3 mins read
88c8ff9e-407e-442c-81e3-0a2ef239259c
பிறப்பு விகிதம் குறைந்து, மக்கள் தொகை குறைந்தால் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்று ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் கவலை தெரிவித்து வருகின்றன. - படம்: இணையம்

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் திங்கட்கிழமை (அக்டோபர் 21) சென்னையில் 31 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்திவைத்த திரு ஸ்டாலின், தென் மாநிலங்களில் நிலவும் குறைவான கருவுறுதல் விகிதங்களைச் சுட்டிக்காட்டினார். “இன்றைக்கு நாடாளுமன்றத் தொகுதிகளெல்லாம் குறைகிறது என்ற நிலை வந்துள்ளதால், நாமும் 16 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாமே என்று சொல்லும் நிலைமையும் வந்துள்ளது,” என்று அவர் கூறினார்.

தென் மாநிலங்களில் முதியோர் எண்ணிக்கை குறித்து கவலை தெரிவித்த ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, அம்மாநிலத்தில் உள்ளவர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இதை ஊக்குவிக்கும் வகையில் தனது அரசு சட்டம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகவும் கடந்த வாரம் கூறினார்.

கருவுறுதல் விகிதங்கள் குறைவதால், இந்தியாவின் மக்கள் தொகை முதுமை அடைந்து வருகிறது. 2050ஆம் ஆண்டுக்குள் ஐந்தில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் மாநிலங்களில் இதன் விளைவு இன்னும் அதிகமாக இருக்கும்.

ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை பிரிவு, அனைத்துலக மக்கள்தொகை குறித்த அறிவியல் ஆய்வுக்காக அனைத்துலக நிறுவனம் (International Union for the Scientific Study of Population) தயாரித்த இந்திய முதியோர் அறிக்கை 2023ன் படி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானாவில் முதியோர்களின் எண்ணிக்கை ஏற்கெனவே அதிகமாக இருக்கும் வட மாநிலங்களான பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக இல்லை. ஆனால், இது 2021க்கும் 2036க்கும் இடையில் மிக அதிக விகிதத்தில் அதிகரிக்கும்.

தென் மாநிலங்களின் மக்கள்தொகையில் முதியோர்களின் விகிதம் 15 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 6-7% அதிகரிக்கும்போது, வட மாநிலங்களில் இது 3-4% ஆக இருக்கும்.

முதியோரைச் சார்ந்திருப்போரின் விகிதமும் அதிகரிக்கும்.

வயதான மக்கள் தொகை குறித்த கவலைகள் உண்மையானவை என்று மும்பை மக்கள் தொகை அறிவியல் அனைத்துலக கல்விக் கழகத்தின் (International institute for population sciences (IIPS)) மக்கள்தொகையியல் இணைப் பேராசிரியர் ஸ்ரீனிவாஸ் கோலி கூறினார்.

இந்தியாவின் மக்கள்தொகை ஆய்வின் முதன்மையாவராக விளங்கும் பேராசிரியர் ஸ்ரீனிவாஸ் கோலி, மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட மாதிரி பதிவு முறையின்படி, கருவுறுதல் விகிதம் ஆந்திராவில் 1.5, கர்நாடகா 1.6, கேரளா 1.5, தமிழ்நாட்டில் 1.5, தெலுங்கானாவில் 1.5 என்று சுட்டிக்காட்டுகிறார்.

தேசிய சராசரியான 68.2 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, ​​தெற்கில் உள்ள மக்கள்தொகையில் முதியோர்களின் விகிதத்தில் அதிக ஆயுட்காலம் உள்ளது. இந்தியப் பதிவாளர் ஜெனரலால் 2016-19ல் சேகரிக்கப்பட்ட அண்மைய தரவுகளின்படி, ஆந்திராவில் ஆயுட்காலம் 69.1 ஆண்டுகள், கேரளாவில் 71.9 மற்றும் தமிழ்நாட்டில் 71.4 ஆண்டுகள். கர்நாடகாவின் ஆயுட்காலம் மட்டும் தேசிய சராசரியை விட சற்றே குறைவாக 67.9 ஆக இருந்தது.

இந்தியாவில் கருவுறுதல் விகிதம் மிக விரைவாகக் குறைந்துள்ளதால் பிரச்சினை மேலும் அதிகரிக்கிறது என்று அவர் கூறினார்.

தற்போது மக்கள்தொகைக்கு ஏற்றவாறு தொகுதி எல்லைகளும் எண்ணிக்கையும் முடிவு செய்யப்படுகிறது. பிறப்பு விகிதம் சீராக இருந்தால் ஆந்திராவில் 25லிருந்து 20 ஆகவும், கர்நாடகாவில் 28லிருந்து 26 ஆகவும், கேரளாவில் 20லிருந்து 14 ஆகவும் தமிழ்நாட்டில் 39லிருந்து 30 ஆகவும் தெலுங்கானாவில் 17 முதல் 15 வரையாக நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக மக்கள்தொகை கொண்ட வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை உயரும். நாடாளுமன்றத்தில் அவற்றின் குரல் ஓங்கி ஒலிக்கும்.

அதேநேரத்தில், நாயுடு முன்மொழிந்ததைப் போல, அதிக குழந்தைகளை ஊக்குவிப்பதன் மூலம் மூப்படைவதை நிறுத்தும் முயற்சி பலனளிக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். “பிறப்பை ஊக்குவிக்க முயற்சிக்கும் பல அரசாங்கங்களில் ஆந்திராவும் ஒன்றாக இருக்கும். மேலும் இது ஐரோப்பா, கிழக்கு ஆசியா உட்பட உலகில் எங்கும் வேலை செய்யவில்லை,” என்று அனைத்துலக புலம்பெயர்வு, மேம்பாட்டு நிறுவனத்தின் இருதய ராஜன் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்