பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய நெடுஞ்சாலை ஆணையம் புது உத்தரவு

பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய நெடுஞ்சாலை ஆணையம் புது உத்தரவு

படம்: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

21 Sep 2026 - 7:24 pm

1 mins read

புதுடெல்லி: இந்திய நெடுஞ்சாலைகளில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மின்னணுக் கண்காணிப்பு அமைப்புகளில் கோளாறு ஏற்பட்டால், அதைப் பராமரிக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்திய நெடுஞ்சாலைகளில் விபத்துகளைத் தடுக்கவும் போக்குவரத்தைச் சீரமைக்கவும் அதிநவீன போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள் நிறுவப்பட்டு வருகின்றன.

இருப்பினும், இவற்றில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி எண் பலகைகளைக் கண்டறியும் கேமராக்கள், கேமரா நேரலைத் தரவுகள் அமைப்பு அடிக்கடி பழுதடைகின்றன என்றும் அவை உடனடியாகச் சரிசெய்யப்படுவதில்லை என்றும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்தச் சேவை குறைபாடுகளைக் களைவதற்காகப் புதிய அபராத விதிகளைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமல்படுத்தியுள்ளது.

கேமராக்கள் பழுதாகி, குறிப்பிட்ட காலவரையறைக்குள் சரிசெய்யப்படாவிட்டால், ஒரு கருவிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்படும்.

கட்டுப்பாட்டு அறையில் உள்ள ‘வீடியோ வால்’ செயல்படவில்லையெனில், வாரத்துக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

கேமரா நேரலைத் தரவு கிடைக்காத ஒவ்வொரு முறைக்கும் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்.

ஒப்பந்ததாரர்களின் செயல்பாடுகளை நூறு புள்ளிகள் கொண்ட மதிப்பீட்டு முறையின்கீழ் அவ்வாணையம் தொடர்ந்து கண்காணிக்கும். இதில் புள்ளிகள் தொடர்ச்சியாகக் குறைந்தால், அவர்களின் ஒப்பந்தமே ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
நெடுஞ்சாலைபயணிகள்பாதுகாப்புமின்னணுவியல்கண்காணிப்புவிபத்துபோக்குவரத்துகண்காணிப்பு கேமராகாணொளி