இமாச்சலப் பிரதேசம்: கட்சி தாவும் எம்எல்ஏவுக்கு ஓய்வூதியம் இல்லை

இமாச்சலப் பிரதேசம்: கட்சி தாவும் எம்எல்ஏவுக்கு ஓய்வூதியம் இல்லை

2 mins read
95e02df9-2773-48cf-8e56-61b9399ae379
கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நீக்கப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறும் தகுதியை இழக்கும் வகையிலான சட்டத் திருத்த மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

சிம்லா: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஆளும் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவையில் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம்செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதியை இழப்பர் என்று இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் எம்எல்ஏ.க்கள் ஓய்வூதியம் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அந்த மசோதாவை அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கடந்த புதன்கிழமை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மசோதா இமாச்சல் பேரவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது.

கடந்த பிப்ரவரி மாதம் இமாச்சலப் பிரதேசத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சுதிர் சர்மா, ரவி தாகூர், ராஜிந்தர் ராணா, இந்தர் தத் லக்கன்பால், சேதன்யா சர்மா மற்றும் தேவேந்தர் குமார் ஆகியோர் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஹர்ஷ் மகாஜனுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

மேலும் சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்பட்ட போதும், இவர்கள் கட்சி கொறடாவின் உத்தரவை மீறி வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகியிருந்தனர்.

இதனால் இவர்கள் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் சுதிர் சர்மா மற்றும் இந்தர் தத் லக்கன்பால் ஆகியோர் இடைத்தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்குத் திரும்பினர். மற்ற 4 பேர் தோல்வியுற்றனர்.

இவர்கள் அனைவரும் புதிய மசோதாவால் பாதிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை கட்சித்தாவல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட இந்தத் திருத்தப்பட்ட மசோதாவின் படி ஏற்கெனவே, ஓய்வூதியம் பெற்று வரும் தகுதியிழப்புக்கு உள்ளானவர்கள் பெற்ற ஓய்வுத் தொகையை அரசாங்கம் திரும்பப் பெறலாம்.

கட்சித் தாவலில் ஈடுபடும் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறும் தகுதியை இழக்கச் செய்யும் மசோதா இந்தியாவிலே இமாச்சலப் பிரதேச மாநிலம்தான் முதன்முதலில் நடைமுறைப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்