அசாம் முதல்வராக ஹிமந்த சர்மா மே 12ல் பதவியேற்பு

அசாம் முதல்வராக ஹிமந்த சர்மா மே 12ல் பதவியேற்பு

2 mins read
e6e6a7c4-a552-4dde-be9e-3c68575184e1
மே 4ஆம் தேதி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதைக் கொண்டாடும் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா - படம்: ஏஎஃப்பி

கவுகாத்தி: அசாம் மாநிலத்தின் முதல்வராக ஹிமந்த பிஸ்வா சர்மா மே 12ஆம் தேதி பதவியேற்கிறார்.

புதிய அமைச்சர்களும் அவருடன் அன்று பதவியேற்கவிருக்கின்றனர்.

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்தக் கூட்டணியின் தலைவராக ஹிமந்த சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து இரண்டாவது தவணைக் காலத்திற்கு அவர் அசாமின் முதல்வராகத் தொடர்கிறார்.

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சிக்குத் திரும்பியிருக்கிறது.

ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 126 இடங்களில் 102 இடங்களைக் கைப்பற்றி தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஒரு பிரம்மாண்டமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

அசாம் மாநிலத்தில் பாஜக முதல் முறையாக தனித்து பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் ஹிமந்த சர்மாவின் தலைமையை அங்கீகரிக்கும் விதமாக 2வது முறையாக அவர் முதல்வராக பதவி ஏற்கிறார்.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும் அசாம் தேர்தல் ஆலோசகராகவும் இருந்த ஜேபி நட்டா, ஹிமந்த சர்மா தலைமையிலான வெற்றியைப் பாராட்டியிருக்கிறார்.

“அசாம் மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் பொது நலனுக்குத் தங்கள் ஆசீர்வாதங்களை வழங்கியுள்ளனர்,” என்று எக்ஸ் பதிவில் திரு நட்டா குறிப்பிட்டுள்ளார்.

பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளார். அவர் மட்டுமல்லாது பல மத்திய அமைச்சர்களும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் இதில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இதற்கிடையே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள் ஞாயிற்கிழமை ( மே 10) ஆளுநரை மீண்டும் சந்தித்து அரசாங்கம் அமைப்பது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடவிருக்கின்றனர்.

அப்போது அடுத்த அரசாங்கம் அமைப்பதற்காக கோரிக்கையை அவர்கள் முறைப்படி விடுப்பார்கள் எனத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்