பிந்த்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் எச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், பலரைத் தனது ஆசை வலையில் வீழ்த்தி ரகசியக் காணொளி எடுத்துப் பணம் பறித்து வந்த அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அந்தப் பெண்ணுடன் தொடர்பிலிருந்த 16 பேருக்கு எச்ஐவி கிருமி பரவியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால், அவர்களைத் தேடும் பணியில் காவலர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லாரா (உண்மைப் பெயரல்ல). அவர், கடந்த மூன்றாண்டுகளாக எச்ஐவி பாதிப்புக்காகச் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அண்மையில் அவர், 60 வயதான முதிய விவசாயி ஒருவரிடம் தனக்குக் கால் வலிப்பதாகக் கூறி காரில் அழைத்துச் செல்லுமாறு உதவி கேட்டுள்ளார்.
முதியவரும் இரக்கப்பட்டு அவரை வீட்டில் கொண்டுபோய் விட்டுள்ளார். அதற்கு நன்றிக்கடனாகத் தேநீர் அருந்த வருமாறு அந்தப் பெண் முதியவரைத் தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.
ரகசியக் காணொளி
வீட்டிற்குள் சென்ற முதியவரை அந்தப் பெண் ஆசை வார்த்தை கூறி உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அப்போது அங்கு ரகசிய கேமரா மூலம் காணொளிப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறிது நேரத்தில் அங்கு வந்த அந்தப் பெண்ணின் நண்பர்கள், முதியவரைச் சூழ்ந்துகொண்டு காணொளியைக் காட்டி ரூ.7 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவம் வெளியுலகுக்குத் தெரிந்தால், தன்னால் நிம்மதியாக வாழமுடியாது என்று பயந்த முதியவர், முதற்கட்டமாக ரூ.5,000 கொடுத்துவிட்டு, மீதிப் பணத்திற்காகத் தனது நிலத்தை விற்க முயன்றுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், அந்தக் கும்பலின் மிரட்டல் அதிகரித்ததால் பொறுமையிழந்த முதியவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
மருத்துவப் பரிசோதனையில் அதிர்ச்சி
முதியவரின் புகாரை அடுத்து காவலர்கள் அந்த மோசடிக் கும்பலைக் கைது செய்தனர்.
மருத்துவப் பரிசோதனையில் லாராவுக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது உறுதியானது.
கைது செய்யப்பட்ட லாராவின் வீட்டில் காவலர்கள் நடத்திய சோதனையில் ஒரு மடிக் கணினி பறிமுதல் செய்யப்பட்டது.
அதனை ஆய்வு செய்தபோது, எச்ஐவியால் பாதிக்கப்பட்ட லாராவுடன் 16 நபர்கள் உல்லாசமாக இருக்கும் தனித்தனி காணொளிகள் இருந்தன.
இதன் மூலம் அந்தப் பெண் ஏற்கெனவே பலரை ஏமாற்றிப் பணம் பறித்தது தெரியவந்துள்ளது.
மேலும், அந்த 16 பேருக்கும் எச்ஐவி கிருமி பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், காணொளியில் உள்ள நபர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய காவலர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நாட்டில் எச்ஐவி பாதிப்பு நிலவரம்
இந்தியாவில் தற்போது 25 லட்சத்திற்கும் அதிகமானோர் எச்ஐவி பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆண்டுதோறும் புதிதாக 66,400 பேருக்கு எச்ஐவி கிருமி பாதிப்பு ஏற்படுகிறது.
ஏறக்குறைய 16 லட்சத்திற்கும் அதிகமானோர் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை பெற வேண்டிய நிலையில் உள்ளனர்.
பிந்த் மாவட்ட காவலர்கள் மேல் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

