பெங்களூரு: இந்தியாவில் இரு குழந்தைகளுக்கு ‘மனித மெட்டாநியூமோவைரஸ்’ (எச்எம்பிவி) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்விரு குழந்தைகளும் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரைச் சேர்ந்தவை. அவற்றுள் மூன்று மாதக் குழந்தை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டது; இன்னொரு குழந்தைக்குச் சிகிச்சை தொடர்கிறது.
இந்தியாவில் எச்எம்பிவி தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதன்முறை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, எச்எம்பிவி கிருமி நீண்டகாலமாகவே இருந்து வருகிறது என்றும் அதனால் இந்தியாவில் அக்கிருமி தொற்றியிருப்பது இதுவே முதன்முறை எனக் கூறுவது தவறானது என்றும் கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நிலைமையை ஆராய்ந்து வருவதால் தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.
அவ்விரு குழந்தைகளும் வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்திருக்கவில்லை. அதனால், பிற வட்டாரங்களில் அல்லது நாடுகளிலிருந்து அக்கிருமி பரவியிருக்க வாய்ப்பில்லை என இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
“வழக்கமான சுவாசப் பரிசோதனைகளின்போது அக்குழந்தைகளை எச்எம்பிவி கிருமி தொற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியா உட்பட உலகம் முழுவதும் எச்எம்பிவி கிருமி பரவி வருகிறது,” என்று சுகாதார அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
எச்எம்பிவி கிருமிப் பரவலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து கலந்தாலோசிக்க திங்கட்கிழமையன்று அமைச்சு ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவ ஆய்வகங்களில் எச்எம்பிவி பரிசோதனைக்கான கொள்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு முழுவதும், சளிக்காய்ச்சல் போன்ற சுவாசப் பிரச்சினைகளுடன் எச்எம்பிவி கிருமிப் பரவல் போக்கையும் இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் (ஐசிஎம்ஆர்) கண்காணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்எம்பிவி தொற்றியுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதற்கான நெறிமுறைகளை வலுப்படுத்தும்படியும், போதிய மருந்துகள் கைவசம் இருப்பதை உறுதிசெய்யுமாறும், மற்ற சுவாசப் பாதிப்புகள் குறித்து ஒருங்கிணைந்த சுகாதாரத் தகவல் தளத்தில் (ஐஎச்ஐபி) பதிவுசெய்யுமாறும் மருத்துவமனைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக, சீனாவில் எச்எம்பிவி தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாக வெளியான தகவல்களை அடுத்து, எச்எம்பிவி உட்பட, சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் கிருமிப் பரவல் குறித்து கண்காணித்து வருவதாக அமைச்சு ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்திருந்தது.