தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

15 நாள்களில் 400 இந்திய விமானங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்

1 mins read
e76733ea-2658-49e5-9663-72794dfc0b81
பாதிக்கப்பட்டவற்றில் இண்டிகோ விமானங்களும் அடங்கும். - கோப்புப் படம்: இணையம்

திடீரென அண்மைக் காலமாக 400க்கும் மேற்பட்ட இந்திய விமானங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு அனைத்துலக விமானச் சேவைகளை மேற்கொண்ட இருவகை விமானச் சேவைகளுக்கும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. திங்கட்கிழமைக்கு (அக்டோபர் 28) முன்பு வந்த சுமார் இரண்டு வாரக் காலத்தில் அந்த வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன என்று தி இந்து ஊடகம் வெளியிட்ட செய்தி குறிப்பிட்டுள்ளது.

“15 நாள்களில் இந்திய விமான நிறுவனங்கள் நடத்தும் 410க்கும் மேற்பட்ட உள்நாட்டு, அனைத்துலக விமானங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன,” என்று தி இந்து வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மிரட்டல்களில் பெரும்பாலானவை சமூக ஊடகங்களின்வழி விடுக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

திங்கட்கிழமை மட்டும் 60க்கும் அதிகமான விமானங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. ஏர் இந்தியா, இண்டிகோ ஒவ்வொன்றும் நடத்தும் 21 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. விஸ்தாரா இயக்கும் 20 விமானங்களும் பாதிக்கப்பட்டன.

சம்பந்தப்பட்ட விமானச் சேவைகளுக்கு எவ்வளவு நேரம் இடையூறு ஏற்பட்டது என்ற தகவல் தெரியவில்லை.

நிலைமையைக் கையாள தகவல், தொடர்பு விதிமுறைகளுக்கு ஏற்றவாறு சமூக ஊடகங்களில் இடம்பெறக்கூடிய பொய்த் தகவல்களை விரைவில் அகற்றுமாறு இந்தியாவின் தகவல், தொடர்பு அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. மேலும், அந்நாட்டின் சிவில் விமானத் துறை அமைச்சு, இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் விமானப் பயணங்கள் மேற்கொள்வதைத் தடைசெய்வது போன்றவற்றின் தொடர்பில் முயற்சிகளை எடுத்து வருவதாக தி இந்து குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்