தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சமூக ஊடகங்களுக்கு இந்தியா எச்சரிக்கை

2 mins read
94b2528f-05de-4d5f-9608-95092fb9fc03
கோப்புப் படம்: - பிக்சாபே

புதுடெல்லி: இந்திய விமானங்கள் பலவற்றுக்கு இம்மாதம் நூற்றுக்கணக்கான போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டு அரசாங்கம், சமூக ஊடகத் தளங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அக்டோபர் மாதம் பல போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதால் தொடர்ந்து பயணத் துறையில் குழப்பம் நிலவியது. அதனையடுத்து பின்விளைவுகளுக்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியா, சமூக ஊடகங்களை எச்சரித்துள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சில விமானங்கள் கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு வழிமாற்றிவிடப்பட்டன. பிரிட்டன், சிங்கப்பூர் வான்வெளியில் பறந்துகொண்டிருந்த விமானங்களைப் போர் விமானங்கள் பாதுகாப்பாக வழிநடத்தும் நிலையும் ஏற்பட்டது.

போதுமான கட்டுப்பாடின்றி போலி வெடிகுண்டு மிரட்டல்கள் இத்தனை முறை விடுக்கப்பட்டது அபாயகரமானது என்று இந்திய அரசாங்கம் எடுத்துரைத்தது. விதிமுறைகளுக்கேற்ப சமூக ஊடகங்கள், தங்கள் தளங்களில் இடம்பெறும் பொய்த் தகவல் பதிவுகளை உடனடியாக அகற்றாவிட்டால் சட்டங்களுக்கு ஏற்ப தகுந்த பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய அரசாங்கம் குறிப்பிட்டது.

“சம்பந்தப்பட்ட விமானங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்தது ஆபத்து விளைவிக்கும் செயலாகும். அவற்றின் காரணமாக பொது ஒழுங்கிற்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படக்கூடும்,” என்று அரசாங்கம் சனிக்கிழமையன்று (அக்டோபர் 26) அறிக்கை ஒன்றில் சுட்டியது.

“இத்தகைய போலி வெடிகுண்டு மிரட்டல்கள், குடிமக்கள் பலரைப் பாதிப்பதோடு பொருளியல் ரீதியாக நாட்டின் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிக்கும்,” என்றும் அறிக்கையில் எடுத்துரைக்கப்பட்டது.

இம்மாதம் நடுப்பகுதியிலிருந்து இந்திய விமானங்களுக்குக் குறைந்தது 275 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அவை அனைத்தும் போலியானவை என்று பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (பிடிஐ) செய்தி நிறுவனம் தெரிவித்தது.

வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் கிட்டத்தட்ட 400ஆகவும் இருக்கலாம் என வேறு சில இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்