சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் ஹோலி பண்டிகையையொட்டி அரசு அதிகாரிகளுக்கு ரூ. 1.22 லட்சம் செலவில் விருந்து வைத்தார் அம்மாநிலத் தலைமைச் செயலர் பிரபோத் சக்சேனா.
அதற்கான ரசீதை அவர் அம்மாநில அரசுக்கு அனுப்பி வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இமாச்சலப் பிரதேச சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தால் நிர்வகிக்கப்படும், ‘ஹாலிடே ஹோம்’ எனும் ஹோட்டலில் அவ்விருந்து மார்ச் 14ம் தேதி நடந்தது.
தலைமைச் செயலரால் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்ட அவ்விருந்துக்கான பணம் இன்னும் செலுத்தப்படாமல் உள்ளது.
இந்நிலையில், அந்த விருந்துக்கான ரசீது, சமூகத் தளங்களில் வெளியானது.
1,000 ரூபாய் மதிப்புள்ள மதிய உணவு, 75 பேருக்கு வழங்கப்பட்டதாகவும் அரசு அதிகாரிகளின் ஓட்டுநர்கள் 22 பேருக்கு, 585 ரூபாய் மதிப்பில் உணவு வழங்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பொருள் சேவை வரி உட்பட 1.22 லட்சம் ரூபாய்க்கான அந்த ரசீதை, தலைமைச் செயலர் அம்மாநில அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இமாச்சலப் பிரதேச அரசு கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் சூழலில் நடந்திருக்கும் இந்நிகழ்வுக்கு அம்மாநில பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இமாச்சலில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.