மும்பை: ஹோலிப் பண்டிகையின்போது போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டோரிடம் இருந்து மும்பை மாநகரக் காவல்துறை ரூ.1.9 கோடி (S$274,550) அபராதம் வசூலித்துள்ளது.
ஹோலிப் பண்டிகை வெள்ளிக்கிழமை (மார்ச் 14) கொண்டாடப்பட்டதை அடுத்து, அந்நாளிலும் அதற்கு முதல்நாளிலும் மும்பைக் காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்தியது.
குறிப்பாக, அக்கொண்டாட்டத்தின்போது சாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முக்கியச் சாலைகள், நெடுஞ்சாலைகள், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகள் ஆகிய இடங்களில் சிறப்புச் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
அவ்விரு நாள்களில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி, 17,495 பேரிடமிருந்து 1.79 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாக ‘டைம்ஸ் நவ்’ செய்தி தெரிவித்துள்ளது.
முன்னதாக, சாலைப் போக்குவரத்து தொடர்பில் வழிகாட்டி நெறிமுறைகளை அறிவித்த காவல்துறை, விதிமீறுவோர்க்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது.
அப்படியிருந்தும், விதிமீறியதாகக் கூறி பல்லாயிரக்கணக்கானோர் பிடிபட்டனர். அவர்களில் தலைக்கவசம் அணியாததற்காக மட்டும் கிட்டத்தட்ட 5,000 பேர் பிடிபட்டனர்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, போக்குவரத்து எதிர்த்திசையில் வாகனம் ஓட்டியது, ஒருவழிப் பாதையில் வாகனம் ஓட்டியது, இருசக்கர வாகனங்களில் மூவர் அமர்ந்து சென்றது, போக்குவரத்து விளக்கை மீறிச் சென்றது, ஓட்டுநர் உரிமமின்றி வாகனம் ஓட்டியது ஆகிய காரணங்களுக்காகவும் நூற்றுக்கணக்கானோர் பிடிபட்டனர்.