தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பக்தர்களின் புகைப்படத்தை புனித நீராட்ட ரூ.1,100 கட்டணம்

2 mins read
eef5bbc5-d8bd-4515-926d-3999c7572c50
புகைப்படங்களை அச்சுப் பிரதி எடுக்கும் தீபக் கோயல், திரிவேணி சங்கமத்தில் அவற்றை புனித நீராட்டி வருகிறார். ஒரு புகைப்படத்துக்கு அவர் ரூ.1,100 கட்டணம் வசூலிக்கிறார். - படம்: தமிழக ஊடகம்

பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா விழாவில் கலந்துகொள்ள முடியாத பக்தர் ஒருவரின் புகைப்படத்தை புனித நீராட்ட ரூ.1,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேள விழா, வரும் 26ஆம் தேதி மகா சிவராத்திரி அன்று நிறைவடைய உள்ளது.

அதற்கு இன்னும் ஓரிரண்டு தினங்களே இருப்பதால் பிரயாக்ராஜில் பக்தர்கள் கூட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் வசிக்கும் தொலைதூர பக்தர்களுக்காக பிரயாக்ராஜ் நகரைச் சேர்ந்த தீபக் கோயல் என்பவர் புதிய சேவை ஒன்றைத் தொடங்கி உள்ளார்.

அதன்படி, தீபக் கோயலின் வாட்ஸ் அப் எண்ணுக்கு பக்தர்கள் புகைப்படங்களை அனுப்பி வருகின்றனர்.

இந்தப் புகைப்படங்களை அச்சுப் பிரதி எடுக்கும் தீபக் கோயல், திரிவேணி சங்கமத்தில் அவற்றை புனித நீராட்டி வருகிறார். ஒரு புகைப்படத்துக்கு அவர் ரூ.1,100 கட்டணம் வசூலிக்கிறார்.

இதுகுறித்து அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், “மகா கும்பமேளாவை ஒட்டி நான் ஸ்டார்ட்-அப் வணிகத்தைத் தொடங்கி உள்ளேன்.

“எனது வாட்ஸ் அப் எண்ணுக்கு புகைப்படம் அனுப்பினால் அதனை நகல் எடுத்து புனித நீராட்டுவேன். நீங்கள் இணையம் வழி பணம் செலுத்திய 24 மணி நேரத்தில் உங்கள் புகைப்படம் புனித நீராட்டப்படும். இது மின்னிலக்கப் புனித நீராடல்,” என்று தெரிவித்துள்ளார்.

தனது வாட்ஸ் அப் எண், இணைய பணப் பரிமாற்றத்துக்கான விவரங்களையும் தீபக் கோயல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

திரிவேணி சங்கமத்தில் பக்தர்களின் புகைப்படங்களை அவர் புனித நீராடல் செய்யும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

குறிப்புச் சொற்கள்