கோல்கத்தா: அண்மையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. அந்த விவகாரம் தீவிரமடைந்ததை அடுத்து, ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
சந்தீப் கோஷ் மருத்துவமனையின் முதல்வராகப் பதவி வகித்தபோது நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது, பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட உடன் அந்த இடத்தில் தடயங்களை அழிக்கும் நோக்கில் கட்டுமானப் பணிகளுக்கு உத்தரவிட்டது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
இப்போது, சந்தீப் கோஷ் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவரது வீடு மற்றும் அவருக்கு நெருக்கமான கூட்டாளிகளின் மூன்று பேர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
முன்னதாக, ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மருத்துவமனையின் முன்னாள் துணை கண்காணிப்பாளர் டாக்டர் அக்தர் அலி கோல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நிதி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த தொடங்கிய மாநில அரசின் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடமிருந்து சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டது.
அந்த மருத்துவமனையில் நடந்த ஊழலுக்கும் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்டதற்கும் தொடர்பு இருக்கலாம் என்று மருத்துவர் அக்தர் அலி கவலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.