இந்தியாவில் வீட்டு விற்பனை குறைந்தது

இந்தியாவில் வீட்டு விற்பனை குறைந்தது

2 mins read
விற்பனை மதிப்பில் புதிய சாதனை
c03c3e18-4192-4a71-a3ad-164e3a46c4f4
2025-26 நிதியாண்டில் இந்தியாவின் 75 முக்கிய நகரங்களில் மொத்தம் 709,793 வீடுகள் விற்பனையாயின.  - படம்: புளூம்பெர்க்

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த நிதியாண்டில் வீட்டு விற்பனை குறைந்தது.

2025-26 நிதியாண்டில் இந்தியாவின் 75 முக்கிய நகரங்களில் வீட்டு விற்பனை குறைந்ததாக ‘லியாசெஸ் ஃபோராஸ்’ ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

2024-25 நிதியாண்டைக் காட்டிலும் வீட்டு விற்பனை ஒரு விழுக்காடு குறைந்ததாக அந்த அறிக்கை குறிப்பிட்டது. அதாவது, அந்த 75 நகரங்களில் மொத்தம் 709,793 வீடுகள் விற்பனையாயின. முந்திய ஆண்டில் அந்த எண்ணிக்கை 719,029ஆகப் பதிவானது.

அதே நேரத்தில், விற்பனையான வீடுகளின் மொத்த மதிப்பு சாதனை அளவாக ரூ.932,965 கோடியை (S$124.8 டிரில்லியன்) எட்டியது. அது, 2024-25 நிதியாண்டைவிடக் கிட்டத்தட்ட 16 விழுக்காடு அதிகம். குறிப்பாக, முக்கிய நகரங்களில் பெரிய, ஆடம்பரமான, விலைமதிப்புமிக்க வீடுகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் செலுத்துவதை அந்தத் தரவுகள் காட்டுகின்றன.

விற்பனை குறைந்தபோதும் சொத்துச் சந்தை மேம்பாட்டாளர்கள் புதிய வீடமைப்புத் திட்டங்களைத் தீவிரமாக அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

கடந்த நிதி ஆண்டில் மட்டும் அந்த 75 நகரங்களில் கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 விழுக்காடு அதிகரித்து 620,842ஆக உயர்ந்தது. அதனால், விற்கப்படாமல் தேங்கியுள்ள வீடுகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 13 விழுக்காடு உயர்ந்து, தற்போது நாடு முழுவதும் ஏறக்குறைய 1.2 மில்லியனாக அதிகரித்துள்ளது.

சந்தையிலுள்ள 17,680 வீடமைப்பு நிறுவனங்களில் 59 பெருநிறுவனங்கள் மட்டுமே புதிய வீடுகளில் 18 விழுக்காட்டுப் பங்களிப்பை வழங்கியுள்ளன; அதேநேரம், கட்டுமானத் துறையிலுள்ள 71 விழுக்காட்டுச் சிறுநிறுவனங்களின் பங்களிப்பு 29 விழுக்காடாக இருந்தது. அதாவது, அவை ஒட்டுமொத்தமாக 181,033 வீடுகளை மட்டுமே கட்டி விற்பனைக்கு விட்டன.

நாட்டின் மொத்த வீட்டு விற்பனையில் கிட்டத்தட்ட 23.7 விழுக்காட்டுப் பங்களிப்புடன், 4 விழுக்காட்டு ஆண்டு வளர்ச்சியையும் பதிவுசெய்து மும்பை மாநகரம் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. கிட்டத்தட்ட 10 விழுக்காட்டுச் சந்தைப் பங்களிப்புடன் பெங்களூரு இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களில் வீட்டு விற்பனை ஏறக்குறைய 4 விழுக்காடு சரிவுகண்டது.

“இந்தியச் சொத்துச் சந்தை தற்போது மாறுநிலைக் காலத்தில் நுழைந்துள்ளது. உயர்மதிப்பிலான வீடுகளுக்கான தேவை ஒருபுறமிருக்க, நடுத்தர வருமானப் பிரிவினர்க்கான வீடுகளுக்கான தேவையும் மீண்டெழுந்து வருகிறது,” என்று ‘லியாசெஸ் ஃபோராஸ்’ அமைப்பின் நிர்வாக இயக்குநர் பங்கஜ் கபூர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்