இந்தியாவில் வீட்டு விற்பனை 6% சரிவு

இந்தியாவில் வீட்டு விற்பனை 6% சரிவு

2 mins read
227d94fb-ab7b-4913-a8c7-35075bf99053
பெங்களூரு, ஹைதராபாத், கோல்கத்தா ஆகிய பகுதிகளில் வீட்டு விற்பனை விகிதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. - கோப்புப் படம்: தி இந்து பிசினஸ் லைன்

புதுடெல்லி: இந்தியாவில் வீடுகளின் விலை அதிகரித்ததாலும் அவற்றுக்கான தேவை குறைந்ததாலும் வீடுகளின் விற்பனை ஆறு விழுக்காடு சரிவு கண்டுள்ளது.

டெல்லி, புனே, சென்னை, மும்பை ஆகிய பகுதிகளில் விற்பனையில் சரிவு காணப்பட்டாலும் நாடு முழுவதும் புதிய வீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்துவது ஜூன் வரையிலான காலாண்டில் ஏழு விழுக்காடு அதிகரித்துள்ளது.

அதே வேளையில் பெங்களூரு, ஹைதராபாத், கோல்கத்தா ஆகிய பகுதிகளில் வீட்டு விற்பனை விகிதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

நிச்சயமற்ற பொருளியல் சூழல், அதிகரிக்கும் விலை ஆகியவற்றால் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மேற்குறிப்பிட்ட ஏழு நகரங்களில் மொத்தம் 96,285 வீடுகள் விற்பனையாகியுள்ளன.

கடந்த ஆண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் வீடுகளின் விலை 7 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதுவே விற்பனை குறைய முக்கியக் காரணியாகக் கருதப்படுகிறது.

ஆனால் இந்திய சொத்துச் சந்தை ஆலோசகரான அனாராக்கின் தரவுகளின்படி, மத்திய கிழக்குப் போர் காரணமாக ஏற்பட்ட தாக்கம் சொத்து சந்தையில் வெளிப்படையாக எதிரொலித்தது என்றும் விற்பனை விகிதங்கள் எதிர்பார்த்தபடியே உள்ளன என்றும் அனாராக் தலைவர் அனுஜ்பூரி தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பச் சேவை துறையில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களின் வரவால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மைகளும் சொத்து வாங்குபவர்களிடம் தயக்கத்தை அதிகப்படுத்திவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் டெல்லி, என்சிஆர் பகுதியில் 14,255 வீடுகள் விற்பனையான நிலையில், நடப்பு ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 13,365 வீடுகள் மட்டுமே விற்பனையாகி ஆறு விழுக்காடு சரிவு பதிவாகியுள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இதேபோல் மும்பை பெருநகரப் பகுதியில் ஆய்வுக்கு உட்பட்ட காலத்தில் விற்பனை அளவு 8 விழுக்காடு சரிந்து 31,275 வீடுகளில் இருந்து 28,710ஆக விற்பனை குறைந்துள்ளது.

புனேயில் கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 15,410 வீடுகள் விற்பனையான நிலையில், நடப்பாண்டு அதில் 15 விழுக்காடு குறைந்து 13,090 வீடுகள் மட்டுமே விற்றுள்ளன.

சென்னையில் விற்பனை விகிதம் 9 விழுக்காடு குறைந்து 5,135 வீடுகள் விற்றுள்ளன.

பெங்களூர், ஹைதராபாத், கோல்கத்தா நகரங்களில் விற்பனை அதிகரித்துள்ளது நல்ல தகவல் என்கிறார்கள் துறைசார் நிபுணர்கள்.

கோல்கத்தாவில் நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் விற்பனை அளவு 10 விழுக்காடு அதிகரித்து 3,860 வீடுகள் விற்றுத்தீர்ந்தன.

இதே காலகட்டத்தில் பெங்களூரு ஒரு விழுக்காடும் ஹைதராபாத் 2 விழுக்காடும் விற்பனை அளவில் வளர்ச்சி கண்டுள்ளன.

டெல்லி என்சிஆர் சொத்துச் சந்தையானது ஏப்ரல்-ஜூன் 2026 வரையிலான காலாண்டில் 13 விழுக்காடு விலை உயர்வைப் பதிவு செய்துள்ளது.

ஆக மொத்தத்தில், நடப்பாண்டில் இரண்டாம் காலாண்டில் 7 நகரங்களிலும் வீடுகளின் சராசரி விலை 7 விழுக்காடு அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்