பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரருக்குக் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பில் ராஜராஜேஷ்வரி நகர் தொகுதிக்கான பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சட்டமன்ற உறுப்பினரும் திரைப்படத் தயாரிப்பாளருமான முனிரத்னா கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒப்பந்ததாரர் செல்வராஜூ (48), முனிரத்னாவுக்கு எதிராக அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளித்ததாகக் கூறப்பட்டது.
அதில், முனிரத்னா தன்னிடம் லஞ்சமாக ரூ.50 லட்சம் கேட்பதாகவும் தர மறுத்தால் கொன்று விடுவதாகவும் மிரட்டினார் என்று செல்வராஜூ குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே செல்வராஜூ வெளியிட்ட ஒலிப்பதிவில் முனிரத்னா, ‘50 லட்சம் ரூபாயை ஒரு வாரத்துக்குள் தராவிட்டால், நடிகர் தர்ஷன் எப்படி ரேணுகா சுவாமியை அடித்துக் கொன்றாரோ அதேபோல உன்னை அடித்துக் கொல்வேன்,’‘ என மிரட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
மேலும் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த செல்வராஜை அவரது சாதியின் பெயரைக் குறிப்பிட்டு முனிரத்னா இழிவாகச் சாடியதாகவும் கூறப்பட்டது.
இந்த ஒலிப்பதிவு ஊடகங்களில் வெளியாகி சனிக்கிழமை (செப்டம்பர் 14) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ராஜராஜேஷ்வரி நகர் காவல்துறையினர், முனிரத்னா, அவரது உதவியாளர் அபிஷேக் உட்பட மூவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
சனிக்கிழமை மாலை கார் மூலம் ஆந்திராவுக்குச் சென்றுகொண்டிருந்த முனிரத்னாவைக் கோலாரில் காவல்துறையினர் கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.


