லக்னோ: பாஜக ஆளும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத்துக்குக் கைப்பேசி அழைப்பில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதில், இன்னும் 10 நாள்களுக்குள் தனது முதல்வர் பதவியிலிருந்து ஆதித்யநாத் விலகவில்லையெனில் கொலை செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டது.
சனிக்கிழமை (நவம்பர் 2) பின்னிரவு நேரத்தில் அடையாளம் காணப்படாத கைப்பேசி எண்கள் மூலம் மும்பை காவல் கட்டுப்பாடு அறைக்கு இந்த மிரட்டலானது வந்துள்ளது.
அதில், “உத்தரப்பிரதேச முதல்வர் தனது பதவியைவிட்டு இன்னும் 10 நாள்களில் விலகவேண்டும். அவ்வாறு செய்யவில்லையென்றால், மும்பையில் மகாராஷ்டிர மாநில முன்னாள் துணை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவருமான பாபா சித்திக் கொலை செய்யப்பட்டது போல் யோகி ஆதித்யநாத்தும் கொலை செய்யப்படுவார்,” எனக் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து மிரட்டல் விடுத்தவர்களைக் கண்டறியும் பணியில் மும்பை காவல்துறையினர் ஈடுபட்டனர். திரு யோகி ஆதித்யநாத்துக்குப் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது. தீவிரவாத தடுப்பு படையும் இது குறித்து விசாரித்தது.
மிரட்டல் வந்த கைப்பேசி எண் யாருக்குரியது என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்ட காவல்துறை, தானே அருகில் உள்ள உல்லாஸ்நகர் என்ற இடத்தில் வசிக்கும் பாத்திமா கான்(24) என்ற பெண்ணுக்கு அந்தத் தொலைபேசி எண் சொந்தமானது என்பது கண்டறிந்தது.
அவரிடம் விசாரித்த போது அவரது கைப்பேசியிலிருந்து அவர்தான் கொலை மிரட்டல் விடுத்தார் என்பதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அப்பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்தனர். பி.எஸ்.சி பட்டதாரியான அவர், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரைக் காவல்துறை கைது செய்தது.
அண்மை காலமாக கொலை மிரட்டல் மற்றும் விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதுவரை 500க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
நடிகர் சல்மான் கானுக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. தற்போது உத்தரப்பிரதேச முதல்வருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.