தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேனிலவுக் கொலை: திருமணமான ஒரு வாரத்தில் கணவரைக் கொன்ற புது மணப்பெண் கூலிப்படையுடன் கைது

2 mins read
419f152b-cde1-4f34-94a7-ec1bd3fd5256
ராஜா ரகுவன்ஷி, சோனம். - படங்கள்: ஊடகம்

போபால்: திருமணமான எட்டு நாள்களில் கணவரைக் கூலிப்படை வைத்து கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில், புது மணப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உதவியதாக மேலும் மூன்று பேர் பிடிபட்டனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி (30), சோனம் (27) ஆகிய இருவருக்கும் அண்மையில்தான் திருமணமானது.

ஒரு வாரத்துக்குப் பின்னர் திருமணத் தம்பதியர் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவுக்கு தேனிலவு சென்றனர்.

அங்குள்ள ஒரு கிராம விடுதியில் தங்கிய இருவரும் திடீரென மாயமானதால் விடுதி நிர்வாகத்தினர் பதற்றம் அடைந்தனர். இருவரது கைப்பேசியையும் தொடர்புகொள்ள முடியாத நிலையில், காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தேடுதல் வேட்டை தொடங்கிய நிலையில், மணமகன் ராஜாவின் உடல் கிராம விடுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அருவிக் கரையின் அருகே சடலமாக மீட்கப்பட்டது. இதையடுத்து, சோனம் தேடப்பட்டு வந்தார்.

சிதைந்த நிலையில் ராஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் கிடைத்த அவரது மனைவியின் வெள்ளை சட்டை, உடைந்த கைப்பேசி ஆகியவற்றை கவனத்தில் எடுத்துக்கொண்ட காவல்துறையினர், சோனம் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

தீவிர தேடுதல் வேட்டை நடந்துவந்த நிலையில், உத்தரப் பிரதேச காவல்துறையிடம் சரணடைந்துள்ளார் சோனம். அவர் தற்போது அளித்துள்ள வாக்குமூலத்தை அடுத்து, சோனம் தன் கணவரைக் கொன்ற அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.

அவருக்கு மூன்று பேர் உதவியதும் அம்பலமானது. சோனம் கைதான நிலையில் அவரது தந்தை தேவி சிங், தன் மகள் கொலை செய்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் மேகாலயா காவல்துறையினர் பொய் சொல்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.

தனது மகளுடன் பேச அனுமதிக்கப்படவில்லை என்று கூறிய அவர், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி, மத்தியப் பிரதேச முதல்வரைச் சந்தித்து முறையிடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வட இந்திய ஊடகங்கள் இந்தச் சம்பவத்தை ‘தேனிலவுக் கொலை’ எனக் குறிப்பிட்டு, பல்வேறு பரபரப்புச் செய்திகளை வெளியிட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்