தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பஞ்சாப் கள்ளச்சாராய மரணம் 23ஆக அதிகரிப்பு

1 mins read
b4f15f5c-e2af-41ae-8501-72c17be2a6a4
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த ஒருவரின் குடும்பத்தினர் அழுது புலம்பினர். - படம்: இந்திய ஊடகம்

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23க்கு அதிகரித்துவிட்டது.

அமிர்தசரஸின் மஜிதா பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிக்க மெத்தனால் எனும் வேதியல் பொருளைப் பயன்படுத்தியுள்ளனர். கடந்த திங்கட்கிழமை (மே 12) அந்தச் சாராயத்தை வாங்கிக் குடித்த ஏராளமானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் பலர் செவ்வாய்க்கிழமை மரணமடைந்தனர். அன்று இரவு வரை 21 பேர் உயிரிழந்த நிலையில், புதன்கிழமை (மே 14) மேலும் இருவர் பலியாயினர். அதனால், இதுவரை 23 பேர் கள்ளச்சாராயத்துக்குப் பலியாகிவிட்டனர்.

அந்தக் கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பனைச் செய்த முக்கிய குற்றவாளி மற்றும் அவரது கூட்டாளிகள் என மொத்தம் 10 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த அனைவரும் அமிர்தசரஸ் மாவட்டத்திலுள்ள பங்கலி, படால்புரி, மராரி கலான், தல்வாண்டி கும்மன், கர்னாலா, பங்வான் மற்றும் தெரேவால் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் எனத் தெரியவந்துள்ளது.

முன்னதாக, பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான், பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனக் கூறியதுடன், அவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என அவர் உறுதி அளித்திருந்தார்.

பஞ்சாப்பில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. ஐந்தாண்டுகளில் அத்தகைய 176 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்